Credit issue: Petition to set up a commission of inquiry into the abuse in the Agricultural Co-operative Bank!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31ம்தேதி பெற்ற பயிர்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குரும்பலூர், எசனை, அன்னமங்கலம், வெண்பாவூர், இரூர், பெரியவடக்கரை, அரசலூர், சில்லக்குடி, புஜயங்கராயநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை அடமானத்தில் பேரில் பயிர் கடன் பெற்றுள்ளனர். கடந்த நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்து கடன் தகுதி சான்று பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், நகைகளை திருப்பி தரவேண்டும், கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

முன்னதாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பயிர் கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை களைந்து கடந்த ஜன.31ம்தேதி வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு கடன்தொகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஜனவரி 31ம்தேதி வரை பெற்ற பயிர்கடன், நகை அடமானத்தின்பேரில் பெற்ற பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். இதில் தகுதி சான்று மற்றும் கடன் அனுமதி சான்று வழங்கி அதற்கான சேவை கட்டணம் பெற்றுள்ளனர். இதில் நகை அடமானம் பெற்றுள்ளனர், குறிப்பிட்ட தொகைக்கு உரம் வழங்கியுள்ளனர். மீத கடன் தொகை வழங்கப்படவில்லை. கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் விவசாயிகள் பெற்ற நகை கடன், பயிர் கடன் தொகை மத்திய கூட்டுறவு வங்கி விவசாயிகளின் வங்கி கணக்கில் ஏற்றப்படவில்லை.ஆகையால் கடன் தொகையும் வழங்கமுடியாது, தள்ளுபடியும் கிடையாது என கூட்டுறவு துறையினர் கூறுகின்றனர்.

மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் விபரங்கள் வங்கி கணக்கில் ஏற்றாதது கூட்டுறவு துறை அதிகாரிகளின் அலட்சியம். இதனால் கூட்டுறவு துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவே கடந்த ஜனவரி 31ம்தேதி வரை விவசாயிகளின் பயிர்கடன், நகை அடமானத்தின்பேரில் பெற்ற பயிர் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்யவேண்டும், வங்கி கடன் இல்லை, தள்ளுபடி இல்லை என கூட்டுறவு கடன் சங்கம் அறிவித்தால் அந்தந்த கூட்டுறவு கடன் சங்கம் முன்பு குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தல் :

பெரம்பலூர் அருகே குரும்பலூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கவேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குரும்பலூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் பயிரிடப்படாமல் பயிரிடப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்து பயிர் கடன் வழங்கியது, நகையை வைத்து பயிர் கடன் மற்றும் உரக்கடன் வழங்கியத்தில் உரம் வழங்கி விட்டு மீதியுள்ள கடன் தொகை வழங்காதது, போலி ஆவணம் வைத்து கடன் வழங்கியது, செலுத்திய தொகைக்கு போலி ரசீது கொடுத்துவிட்டு உண்மையான ஆவணங்களில் தொகைக்கான வரவு வைக்காதது, நகை மற்றும் உர கடனுக்கான உறுதி மொழி கொடுத்து அதற்கான சேவை கட்டணம் வசூலித்து விட்டு தற்போது கடன் இல்லை என்பது போன்ற வகையில் பல லட்ச கணக்கில் முறைகேட்டில் ஈடுப்பட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் சுந்தர்ராஜ், காசாளர் இளங்கோவான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், உண்மை நிலையை அறிய விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என அப்பகுதி பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!