Deepavali, hosting black flag in houses: sugarcane farmers
பெரம்பலுார் : கரும்புக்கான நிலுவைத்தொகையை அக்., 29ம் தேதிக்குள் வழங்கவில்லையெனில், தீபாவளி அன்று கரும்பு விவசாயிகளின் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றுவது என அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலர் ராஜாசிதம்பரம் தலைமையில் பெரம்பலுாரில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், பெரம்பலுார் சர்க்கரை ஆலைக்கு 2015- 2016ம் ஆண்டின் அரவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு,
ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 42 கோடியை அக்., 29ம் தேதிக்குள் தமிழ்நாடு சர்க்கரைத் துறையும், தமிழக அரசும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் தீபாவளி தினத்தன்று நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகளின் வீடுகளில் கறுப்புக் கொடியேற்றி விவசாயிகளின் எதிர்ப்பை தெரிவிப்பது.
அதன் பிறகும் வழங்க தவறும்பட்சத்தில் நவ., 9 ஆம் தேதி பெரம்பலுார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் உள்ள அனைத்து கோட்ட அலுவலகத்துக்கும் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். அகில இந்திய கூட்டமைப்பு சார்பில், அனைத்து ஆலைகளின் ஆலோசனைக் கூட்டத்தை திருச்சியில் நடத்துவது.
பெரம்பலுார் சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுத் தராமல், ஆலையின் புணரமைப்பு மற்றும் இணை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்காமல், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு பதில் அளிக்காமல் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சர்க்கரைத்துறை ஆணையரின் செயலை கண்டிப்பது.
காவிரி டெல்டா பகுதி விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். டெல்டா விவசாயிகள் நடத்தும் ரயில் நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.