Dengue: Collector examined at MRF tire factory near Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு கொசு பராவமல் தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல்நிலை அலுவலர்களுக்கு என்று ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டு அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுசெய்து வருகிறார்.

இன்று நாரணமங்கலம் பகுதியல் உள்ள எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆலையின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பார்த்தார். அப்போது முந்தையநாள் பெய்த மழையின் காரணமாக அங்கிருந்த இரும்புப் பொருட்களில் தண்ணீர் தேங்கியிருந்தது, கழிவுப் பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சில வெற்றிடங்களிலும் நீர் தேங்கியிருப்பதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். நல்லநீரில் வளரக்கூடிய ஏ.டி.எஸ் கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவான சூழலை நாமே உருவாக்கக்கூடாது.

இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்துப்பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு நீர் தேங்காத வகையில் இருக்க வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட பின்னர், அதற்கான புகைப்பட ஆதாரங்களுடானான அறிக்கையினை மாவட்ட நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இனிவரும் நாட்களில் இதுபோன்று நீர் தேங்கும் வகையில் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளிடம் கூறினார்.

பின்னர் நாரணமங்கலம் பகுதியல் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் வீடு,வீடாகச் சென்று பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தண்ணீரை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், நீர் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தையும், மொட்டைமாடியையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

துப்புறவு பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைக் காவலர் பணியார்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் எந்த வீடும் விட்டுப்போகாத அளவில் அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று குப்பைகளை, கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

அவற்றை நீர் தேங்கும் வகையில் போட்டு வைக்கக்கூடாது என்று எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வீடுகளின் மொட்டை மாடிகளுக்கும் சென்று மழைநீர் தேங்கும் வகையில் ஏதேனும் கழிவுகள் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சம்பத், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன், சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!