Discharge from Kottarai reservoir; Perambalur Collector Warning!

 

கொட்டரை நீர்தேக்கத்தில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் நீர்வரத்து முழுவதும் மருதையாற்றிலிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதால் மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே முழு கொள்ளளவை 212.47 மில்லியன் கன அடி எட்டியுள்ளது. உபரி நீர் முழுவதும் அணையிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதாலும், தொடர்மழை நீடித்து வருவதாலும், நீர்த்தேக்கத்திற்கு வந்துகொண்டிருக்கும் சுமார் 2000 கன அடி நீர்வரத்தும் மருதையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கனமழை அதிகரித்தால் கூடுதலான நீர் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.

மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கொட்டரை, குரும்பாபாளையம், ஆதனூர், பிலிமிசை, கூத்தூர், இலுப்பைகுடி, இராமலிங்கபுரம், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம், கூடலூர் கிராம பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது. எனவே ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும், குழந்தைகள் ஆற்றுப் பகுதிக்கு செல்லவோ வெள்ள பகுதியை பார்க்கவோ அனுமதிக்க கூடாது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ள அபாயம் ஏற்பட்டால் மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகளை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!