Educational scholarships for school students in Perambalur Canara Bank
பெரம்பலூரில் 60 ஆதிதிராவிட மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: வங்கி விழாவில் மாவட்ட திட்ட இயக்குனர் வழங்கினார்.
பெரம்பலூரில் நடந்த கனரா வங்கி விழாவில் 60 ஆதிதிராவிட மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வழங்கினார்.
பெரம்பலூரில் கனரா வங்கியின் 112-வது ஆண்டு தொடக்க விழாவும்,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி கிளைகளின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும் பெரம்பலூர் கனரா வங்கியில் நேற்று நடந்தது.
பெரம்பலூர் கனரா வங்கி முதுநிலை மேலாளர் சந்திரசேகர் வரவேற்றார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சம்பத் முன்னிலை வகித்தார்.
விழாவிற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தலைமை வகித்து பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் கனரா வங்கியின் 10 கிளைகளின் சார்பில் 5, 6, 7-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு முறையே ரூ.2,500-ம், 8, 9, 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.5,000-ம் மொத்தம் 60 பேருக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகைகளை காசோலைகளாக வழங்கினார்.
விழாவில், கனரா வங்கி கிளைகளின் மேலாளர்கள், பள்ளி மாணவிகளின் பெற்றோர், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர் பிரீத்தி நன்றி கூறினார்.