Electricity Assistant Engineer must conduct the competition for the job immediately! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான போட்டித் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்ப்பு மட்டுமின்றி, மின்சார வாரியத்தின் துரிதமான செயல்பாடு சார்ந்த இந்த விவகாரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 325 உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டு, அதன்பின்னர் இது மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்தப் பணிக்கு 87 ஆயிரத்து 378 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்திருந்ததனர். உதவிப்பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும் நாள் பிறகு அறிவிக்கப் படும் என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின்னர் இதுவரை 6 மாதங்களுக்கு மேலாகியும் தேர்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கான காரணமும் தெளிவுபடுத்தப்படவில்லை.

பொறியியல் படிப்பு முடித்து மின்வாரியத்தில் தொழில் பழகுனராக பயிற்சி பெற்றவர்கள், உதவிப் பொறியாளர் பணி நியமனத்தில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே உதவிப் பொறியாளர் பணிக்கு போட்டித்தேர்வு நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்ட போதும், இதேபோன்ற காரணத்தால் பல மாதங்களாக தேர்வு நடத்தப்படவில்லை.

இப்போதும் நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி போட்டித் தேர்வை தாமதப்படுத்துவது முறையல்ல. தொழில் பழகுனர்கள் தொடர்ந்த வழக்கில், உதவிப் பொறியாளர் பணிக்கான போட்டித் தேர்வை நடத்த தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இன்னும் கேட்டால், தொழில் பழகுனர்கள் தொடர்ந்த வழக்கு இன்னும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மின்வாரிய உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எப்படியும் அந்தப் பணிக்கு சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருப்பதால் வேறு வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை. மற்றொரு புறம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 325 உதவிப் பொறியாளர் பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதற்குப் பிந்தைய 6 மாதங்களில் மட்டும் 250 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் காலியாகியுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 500ஆக உயரும். இதனால் மின்சார வாரியத்தின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாதது மிகவும் கவலையளிக்கிறது.

மற்றொருபுறம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 28,000 களப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மின்சார வாரியத்தின் அடித்தளமாகவும், உயிர் நாடிகளாகவும் விளங்குபவர்கள் களப் பணியாளர்கள் தான். அவர்கள் இல்லாமல் மின்சார வாரியப் பணிகள் நடைபெறாது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அடுத்த 50 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், புயல், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய அடிப்படைப் பணியாளர்கள் அவசியம் ஆவர். ஆனால், இதை உணராத தமிழ்நாடு மின்சார வாரியம் களப் பணியாளர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமடைந்து வருகின்றன. இதை உடனடியாக சீரமைக்கவேண்டியது அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு, மின்வாரியத்திற்கு உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல், காலியாக உள்ள 28,000 களப் பணியாளர் பணியிடங்களையும், நேர்மையான முறையில் தகுதியுள்ளவர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு முன்வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!