Female death due to wrong treatment: The case field against of doctor and nurse


பெரம்பலுார் அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சை அளித்ததால், இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர் மீது பெரம்பலுார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி மணிமேகலை (வயது 27), இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணமாகி முத்துசரன்,2, பேரரசன் என்ற 4 மாத குழந்தை என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன், பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் மணிமேகலை இரண்டாவது குழந்தை பெற்றபோது, மேலும் கருத்தரிக்காமல் இருப்பதற்காக, மணிமேகலைக்கு ‛காப்பர் டி ’என்ற கருத்தடை சாதனத்தை டாக்டர்கள் பொருத்தினர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மணிமேகலைக்கு கடுமையான வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் அவதியுற்ற அவர், கடந்த 7 ம் தேதி பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்தார். மணிமேகலையை பரிசோதித்த டாக்டர்கள் ‛காப்பர் டி’ யை சாதனத்தை அகற்றினால் சரியாகிவிடும் என தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, 9ம் தேதி மணிமேகலைக்கு ‛காப்பர் டி’ கருத்தடை சாதனத்தை அங்கு பணியில் இருந்த செவிலியர் வெளியில் எடுத்துள்ளார். கருத்தடை சாதனத்தை முறையாக நீக்காததால் மணிமேகலையின் கர்ப்பப்பையில் ஓட்டை விழுந்தது. இதனையடுத்து சுயநினைவை இழந்த மணிமேகலைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11:00 மணியளவில், மணிமேகலை உயிரிழந்தார்.

இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த பொது மக்களும், தவறான அறுவை சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு, பெரம்பலுார்-துறையூர் சாலையில் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பெரம்பலுார் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத்தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து மணிமேகலையின் கணவர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலுார் போலீஸார் தவறான சிகிச்சை அளித்த டாக்டர் சூரியபிரபா மற்றும் நர்ஸ் ரமணிஜீவாகேத்ரின் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

சஸ்பெண்ட்: கருத்தடை சாதனத்தை முறையாக நீக்காததால், இளம்பெண் மணிமேகலையின் இறப்புக்கு காரணமான, முதுநிலை உதவி மருத்துவர் சூர்யபிரபா, மகப்பேறு உதவியாளர் ரமணிஜீவாகேத்ரின் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜன் நேற்று உத்தரவிட்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!