Four persons have been arrested under the thief in the murder case and murdered in Namakkal district
நாமக்கல் மாவட்டத்தில் கொலை மற்றும் கள்ளச்சாராய வழங்கில் குண்டர் சட்டத்தின் கீழ் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டை வெட்டுக்காட்டை சேர்ந்தவர் ஆர்ஆர்பிசுரேஷ். இவர் அதிமுக அம்மா பேரவை சேந்தமங்கலம் ஒன்றிய செயலராக இருந்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மலைவேப்பன்குட்டை, மந்திரி தோட்டத்தை சேர்ந்த விமல்குமார்(28) மற்றும் வெட்டுக்காட்டை சேர்ந்த சிவக்குமார்(44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரும் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பரிந்துரையின் பேரில் இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்டகலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டார். அதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
கள்ளச்சாராய வழக்கு:
ராசிபுரம் தாலுக்கா முள்ளுக்குறிச்சி அருகே உள்ள ஊனாந்தாங்கல் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக கடந்த 5ம் தேதி ஊனாந்தாங்கல், கொளக்கமேட்டை சேர்ந்த சதீஷ்குமார்(23) மற்றும் முருகேசன்(26) ஆகியோரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். இதில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி மற்றும் மே மாதம் 5ம் தேதி என இருவேறு நாட்களில் மொத்தம் ஆயிரத்து 600 லிட்டர் சாராய ஊரலும், 50 லிட்டர் சாராயமும் போலீசாரால் பறிமுதல் செய்யப் பட்டது.
இருவர் மீதும் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.