Government School, District Collector examination work at Primary Health Centers

பெரம்பலூர் : அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் மற்றும் கற்கும் திறன்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று ஆய்வு செய்தார்.

அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், கல்வித் துறையில் அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும், மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்தும் அவ்வப்போது பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கல்வித்துறை சேர்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், வேப்பந்தட்டை வட்டம் நெய்குப்பை அரசு உயர் நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இன்று திடீராய்வு ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியர் வாரநாட்களில் தேர்வுகள் முறையாக நடத்தப்படுகின்றதா என்றும், சத்துணவு முறையாக வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார். மேலும், மாணவ-மாணவிகளின் எழுத்துப் பயிற்சிக் கையேடுகளையும் பார்வையிட்டார்.

பள்ளிக்கு தொடர்ந்து அதிக நாட்கள் வராத மாணவதுகளின் பெற்றோர்களை தொடர்பு கொண்டு பள்ளி வராமைக்கு உரிய காரணங்களை கண்டறிய வேண்டும் என்றும், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட உணவுகளின் தரம் குறித்தும், சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அப்பள்ளி வளாகத்திலேயே அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் விடுதியை பார்வையிட்டார்.

அங்கு விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக சமைக்கப்பட்டுக் கொண்டிருந்த உணவுகள் குறித்தும் பார்வையிட்ட அவர், இவ்விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் எவ்வித சிரமும் இன்றி தங்களின் படிப்புகளில் முழு கவனமும் செலுத்தும் வகையில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நெய்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வுப் பணி மேற்கொண்டார். அங்கிருந்த நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருத்துவர்கள் குறித்த நேரத்தில் வருகை தருகிறார்களா என்றும்,

மருத்துவப்பரிசோதனை செய்து மருந்துகள் வழங்குவதில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்றும் நோயாளிகளிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதா என்றும், அடிப்படை பரிசோதனைகள் செய்வதற்குத்தேவையான வசதிகள் உள்ளதா என்றும் மருத்துவரிடம் கேட்டறிந்து அதனை பார்வையிட்டார். பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கலைச்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவிராஜன், நெய்குப்பை அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!