பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சம் மோசடி செய்த இருவரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரை சேர்ந்தவர் முத்து மகன் ராஜ்குமார் (27). என்ஜினியரிங் பட்டதாரியான இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது அங்கு கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து கண்ணன் மூலம் அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா குழுமூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் வீரபாண்டியன்(33) மற்றும் அதே பகுதியிலுள் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் முத்துகுமார்(25) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வீரபாண்டியனும், முத்துகுமாரும் தங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சரிடம் நல்ல செல்வாக்கு உள்ளதாகவும், இதனால் உங்களுக்கு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருகிறோம்என்று கூறி ரூ.19 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.
நம்பிய ராஜ்குமார் ரூ.19 லட்ச ரூபாய் பணத்தை பெரம்பலூர் அருகே உள்ள நான்கு ரோட்டில் வைத்து வீரபாண்டியன் மற்றும் முத்துகுமாரிடம் கொடுத்துள்ளார்.
மேலும், ராஜ்குமாரின் சகோதரர் பாஸ்கருக்கு அரசு டிரைவர் வேலை வாங்கி தருவதாக தலா ரூ.6 லட்சமும், ராஜ்குமாரின் நண்பர்களான கிஷோர், வேல்முருகன் ஆகியோரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தலா 12 லட்சமும்எமொத்தம் ரூ.61லட்ச ரூபாயை ரொக்கம் மற்றும் கசோலைகளாக வீரபாண்டியனும், முத்துகுமாரும் பெற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் உள்பட 4 பேருக்கும் பணியில் சேருவதற்கான பணி நியமன கடிதத்ததை அனுப்பி வைத்துள்ளனர். அந்த கடித்தை பெற்று கொண்ட ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று கடிதங்களை அளித்த போது பணி நியமன உத்தரவு கடிதம் அனைத்தும் போலியானது என்று தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் வீரபாண்டியன் மற்றும் முத்துகுமார் ஆகியோரை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்து கொடுத்த பணத்தை கேட்டுள்ளனர்.
அதற்கு வீரபாண்டியனும், முத்துகுமாரும் இது பெரிய இடத்து சமாச்சாரம் வீணாக பிரச்சினை செய்ய வேண்டாம் வந்த வழியே திரும்பி ஓடி விடுங்கள் என்று திட்டியும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ராஜ்குமார் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லெட்சுமிலதா தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து செய்து மோசடியில் வீரபாண்டியன் மற்றும் முத்துகுமார் ஆகிய இருவரையும் இன்று கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.