Group-4 competition in Perambalur district: 15,550 wrote: Collector review
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் – 4 தேர்வு இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் – 4 தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் 18,561 நபர்கள் எழுத நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் 15,550 நபர்கள் மட்டும் தேர்வில் பங்கேற்றனர். மீதமுள்ள 3011 நபர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
இத்தேர்விற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் 61 மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு நடைபெறும் மையங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாவண்ணம் கண்காணித்திட 15 நடமாடும் குழுக்கள், 7 பறக்கும்படை குழுக்கள், காவலா;கள் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு தேர்வு அமைதியான முறையில் நடந்திட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன, என தெரிவித்தார்.
மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி அரும்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, ரோவர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களையும் பார்வையிட்டார்.