Guru Peerachchi Festival: Plenty of devotees participate near Perambalur!

குரு பார்க்க கோடி நன்மை என்பது ஐதீகம்! இத்தகைய சிறப்பு வாய்ந்த குரு பகவான் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சரிக்கும் போதும் குருபகவான் மற்றும் சிவாலயங்களில் குரு பெயர்ச்சி விழா நடைபெறும்.

இதன்படி நேற்று இரவு 9.48 மணிக்கு குரு பெயர்ச்சி அடைந்த குருபகவானுக்கு பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோயில், கிபி 10ம் நூற்றாண்டில் பராந்தகச்சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

இந்துசமய அறநிலையத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலின் முன் பகுதியில் விஜய நகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கல் மண்டபம்
சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

மேலும் ராமயண காலத்தில் வாலி, சிவனை வழிபட்ட ஸ்தலமாகவும், இவ்வூர் வாலியை ராமன் மறைந்திருந்து கொன்ற இடமாகவும் கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் ஆலயத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரை குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜைகளும், 8 மணிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பழங்கள் மற்றும் மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு மகா அபிஷேகமும், பல்வேறு மலர்களால் அலங்காரம் நடைபெற்றது.

இதனையடுத்து 9.48 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்த குருபகவானுக்கு சிறப்பு தீபாராதனையும் வழிபாடும் நடத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர், வாலிகண்டபுரம், பிரம்மதேசம், சாலை, வல்லாபுரம், தேவையூர், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, பாத்திமாபுரம், சிறுகுடல், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போன்று, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் குரு பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!