Gutka corruption affair: DSP, Inspector, CBI summons to appear

குட்கா ஊழல் விவகாரத்தில் காவல்துறை டிஎஸ்பி மன்னர் மன்னன்,தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக் கொண்டு சில உயர் அதிகாரிகள் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர் சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள ஒரு குட்கா கிடங்கில் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராக அப்போது இருந்த இப்போதைய டிஜிபி தே.க.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெல்லி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கிறது. இதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள டெல்லி சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கிடங்குக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி சீல் வைத்தனர்.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தொடர்புடைய கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனர்.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வழக்கின் மறைமுகத் தொடர்புடையவர்களிடம் விசாரணை செய்ய சிலருக்கு டெல்லி சிபிஐ அதிகாரிகள், அழைப்பாணை அனுப்பியிருந்தனர். அதன்படி, மாதவராவிடம் ஊழியர்களாக பணிபுரிந்த 4 பேர், அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நேற்று ஆஜராயினர்.

அவரிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள், தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். குட்கா ஊழல் தொடர்பான கேள்விகளை கேட்டு, அவர்கள் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர். இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது. இதில் வழக்குத் தொடர்பான பல முக்கியத் தகவல்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, வழக்கில் மறைமுகத் தொடர்புடையதாகக் கருதப்படும் தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சில அதிகாரிகளுக்கு சிபிஐ அழைப்பாணையும் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாதவரத்தில் சட்டத்துக்கு எதிராக குட்கா கிடங்கு கண்டுபிடிக்கப்பட்ட போது, புழல் காவல் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் மன்னர் மன்னன். செங்குன்றத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சம்பத். இவர்கள் அப்பகுதியில் பணியாற்றிய போதுதான் மாதவரத்தில் குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. எனவே, இந்த தொடர்பில் மன்னர் மன்னன் மற்றும் சம்பத் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது.

சம்பத் தற்போது தூத்துக்குடியில் சிப்காட் காவல் ஆய்வாளராக உள்ளார். மன்னர் மன்னன் மதுரையில் ரயில்வே டிஎஸ்பியாக உள்ளார். அவர்களது வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர்களுக்குத் தெரியாமல் மாதவரத்தில் குட்கா கிடங்கு எப்படி இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!