Gutka worth Rs 13 lakh taken near Namakkal: Four arrested; Police action
நாமக்கல் : பரமத்திவேலூரில் வெவ்வெறு சம்பவங்களில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசாரும் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினரும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு உத்தரவின்பேரில் பரமத்தி வேலூர் டிஎஸ்பி ராஜூ தலைமையில் போலீசார் வடக்கு நல்லியாம்பாளையத்தில் உள்ள கல்லூரி ரோட்டில் சுண்டப்பானை அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இரண்டு மினி ஆட்டோக்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் 42 மூட்டை குட்கா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 மினி ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பரமத்தி வேலூர் பாரதி நகரைச் சேந்த மின் ஆட்டோ டிரைவர்களான விக்னேஷ் (வயது 22), கரூர் மாவட்டத்துக்குள்பட்ட மண்மங்கலம், மோதுக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மதன்குமார் (24) , பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம்புதூரைச் சேர்ந்த கந்தசாமி மகன் முத்துக்குமார் (39) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாலப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 மூட்டை குட்கா, 6 பெட்டி குட்காவையும் பறிமுதல் செய்தனர். மேலும் கண்டர் நகரைச் சேர்ந்தவர் கோபால் மகன் விஜய் (எ) ராமலிங்கத்தை (35) மோகனூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான பரமத்தி வேலூர் சக்ரா நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் தீனதயாளன் (34), ஜெகன் (32) ஆகியோரை பரமத்தி வேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பரமத்தி வேலூர் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் உள்ள கந்தநகரில் உள்ள ஒரு கிடங்கில் 18 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்காவை பறிமுதல் செய்தனர்.
பின்னர், கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக கிடங்கின் உரிமையாளர் பாண்டமங்கலத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் தினேஷ்குமாரிடம் (28) விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 13 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.