Higher fees and costs, if the consumer court orders issued refunds

ஓடாத மின் மோட்டாருக்கு அதிக மின் கட்டணம் வசூலித்த மின்சாரவாரியம், நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உத்தரவால் பணத்தை திருப்பி வழங்கியது.

நாமக்கல் பொன்விழா நகரைச் சேர்ந்தவர் மதுர, அரசுப் பள்ளி ஆசிரியர். இவர் 2000ஆம் முதல் 2006 ஆம் ஆண்டு வரை முடிய வகுரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொன்விழா நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பின் நலச் சங்க செயலாளராக இருந்துள்ளார்.

சங்கத்துக்கு சொந்தமான ஒரு போர்வெல் கிணற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், 2003 மார்ச் மாதம் முதல் மின் மோட்டார் இயக்காமல் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மின்சாரம் பயன்படுத்தாததாலும், பயனீட்டு அளவு இல்லாததாலும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் கணக்கெடுக்க வந்த மின்கணக்கீட்டாளர் பயனீட்டு அளவு இல்லை என்றும் மின்கட்டணமாக குறைந்தபட்ச கட்டணத்தைக் குறிப்பிட்டு வந்துள்ளார்.

நலச்சங்கத்தால் 2 மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. இதேநிலை தொடர்ந்து இருந்து வந்த நிலையில் 14 மாதங்களுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயனீட்டு அளவு இல்லாத போதும் மின்கட்டணமாக ரூ.46,497 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டாரின் மின் இணைப்பு ஒன்றுக்கு மின்கட்டணம் செலுத்த சொல்வது ஏற்கக் கூடியதல்ல. எனவே, இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்கு மதுரம் கடிதம் எழுதினார். ரூ.46,497 தணிக்கை குழுவால் விதிக்கப்பட்ட சராசரி தொகையாகும். அதை வாரிய விதிப்படி தள்ளுபடி செய்ய தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவு தெரியும் வரை கட்டணம் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மின்சார வாரியத்தால் பதில் அளிக்கப்பட்டது.

2004 அக்டோபர் மாதத்தில் மதுரம் மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்றபோது ஏப்ரல் மாதத்துக்கு குறைந்தபட்ச மின் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று கூறி ரூ.100 மட்டும் வசூலித்தனர். இது ஒருபுறமிருக்க சம்பந்தப்பட்ட மின் இணைப்பின் மின் மீட்டர் பழுதானதால் அதற்கு சராசரி மின் கட்டணம் ரூ.46,397 கணிப்பு செய்து தணிக்கையாளர்களால் அறிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் சேலம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளருக்கும், வகுரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி நிர்பந்தம் செய்து வந்தது. இதனை அறிந்த மதுரம் பயன்படுத்தாத மின்மோட்டாரின் மின் இணைப்புக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தபட்ச கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இரண்டு வருடங்கள் கழித்து மீட்டர் பழுது என்று பொய்யான காரணம் கூறி தணிக்கை என்ற பெயரில் சராசரி கட்டணம் நிர்ணயம் செய்ததை ரத்து செய்யுமாறும் மின் மீட்டர் நல்ல நிலையில் உள்ளது என்பதையும் ஆவணங்கள் மூலம் நிரூபணம் செய்தும், வழக்கு செலவு தொகை வழங்கக் கேட்டும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மதுரம் 2005 ஜூன் மாதத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2011, நவம்பர் மாதம் சராசரி கட்டணம் ரூ.46,397 தள்ளுபடி செய்தும், வழக்கு செலவுத் தொகை ரூ.2,000 வழங்கவும் நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் வழக்கு விசாரணையில் இருந்த போதே மதுரத்துக்கு தெரியாமல் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே 29.3.2006-இல் வகுரம்பட்டி ஊராட்சித் தலைவரிடமிருந்து கட்டாயப்படுத்தி வசூலித்து விட்ட காரணத்தால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநில நுகர்வோர் ஆணையத்தில் 2012, மார்ச் மாதம் மின்வாரியம் மேல்முறையீடு செய்தது.

மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும் கடந்த 2014, டிசம்பர் மாதம் மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதன் பிறகும் நீதிமன்ற உத்தரவை மின்வாரியம் நிறைவேற்றாததால், நிறைவேற்றக் கோரும் மனு 2015, செப்டம்பர் மாதத்தில் மதுரத்தால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.46,397 யாரால் செலுத்தப்பட்டதோ அவருக்குத் தொகை திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மதுரத்தின் நிறைவேற்றக் கோரும் மனு மீது நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் மின்வாரிய அதிகாரிகள் மீது பிடியாணை பிறப்பித்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று மின்சார வாரியம் வகுரம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவரிடமிருந்து வசூலித்த சராசரி கட்டணம் ரூ.46,397-க்கும் மனுதாரர் மதுரத்துக்கு வழக்கு செலவு தொகை ரூ.2,000-க்கும் தனித்தனியாக மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத் தலைவர் செங்கோட்டையன் முன்னிலையில் காசோலைகளை வழங்கியது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!