I have full responsibility of any fault in the electric tender: Minister P.Thangamani interviewed
#Namakkal :
மின்வாரிய டெண்டர்களில் எந்த குறைபாடு இருந்தாலும் முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்றார் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியில் நடந்த விழாவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
விளை நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதால் விவசாயிகளின் முழு ஒத்துழைப்புடன் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படும்.
யூனிட் 10 ரூபாய் 15 ரூபாய் என்ற விலையில் கடந்த காலத்தில் மின்சாரம் வாங்கப்பட்டது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போது குறைந்த விலைக்கு தான் மின்சாரம் வாங்குகிறோம். தேசிய மின் கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இடங்களில் இருந்து 6,000 மெகாவாட் மின்சாரம் குறைந்த விலையில் தான் வாங்கப்படுகிறது.
தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது அதிக அளவில் வேகன்களில் வேண்டுமென கேட்டுள்ளோம். வரும் திங்கள்கிழமை முதல் அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். தற்போது நீர் மின் நிலையங்கள் மூலம் 1,600 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 4,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
நகராட்சி பகுதிகளை பொறுத்தவரை புதைவட மின் வயர்கள் அமைக்கும் பணி முதன்முறையாக குமாரபாளையம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழகத்தில் தேரோடும் வீதிகளில் இத்தகையை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தால் பரிசீலனை செய்யப்படும்.
மின்வாரியத்தில் டெண்டர் அனைத்தும் ஒளிவு மறைவு இல்லாமல் இ டெண்டர் முறையில் நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்பு, பணி இடமாறுதல்களிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எந்த டெண்டரில், எந்த குறைபாடு இருந்தாலும் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.