In Perambalur Gas cylinder exploded in a hotel fire
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பிரதான சாலையில் இயங்கி வந்த ஹோட்டலில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
பெரம்பலூர் நகராட்சி துரைமங்களம், கே.கே நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காமராஜர் வளைவு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று இரவு, வழக்கம் போல் வியாபாரத்தை முடித்த ரவிச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் விறகு அடுப்பிலிருந்த தீயை அணைக்காமல் ஹோட்டலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றாக கூறப்படுகிறது. விறகு அடுப்பிலிருந்த தீ, கேஸ் இணைப்பு குழாயில் தீ பற்றி எரிந்து அதன் வழியாக கேஸ் சிலிண்டர் தீ பிடித்து திடீரென வெடித்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர்(பொ) சதாசிவம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைத்து மேலும் அக்கம் பக்கம் பரவாமல் தடுத்தனர்.
நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த இந்த திடீர் தீ விபத்தில் ஹோட்டலில் வைத்திருந்த மளிகை சமான்கள், பாத்திரங்கள் மற்றும் டேபிள், சேர் உட்பட ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.
ஹோட்டலில் திடீரென கேஸ் சிலிண்டர் தீ பிடித்து பயங்கர வெடி சத்தம் கேட்டு அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகள் பலரும் தங்களின் வீட்டை விட்டு வெளியே அதிர்ச்சியுடனும், பதட்டத்துடன் ஓடி வந்ததால் சிறிது நேரம் பரபரப்பாக அப்பகுதி காணப்பட்டது.