In Perambalur to Rs 10,000 compensation to the farmer to the consumer court ordered tahsildar
பெரம்பலூர் அருகே பட்டா மாற்றம் செய்து தர காலதாமதம் செய்ததால் விவசாயிக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் தாசில்தாருக்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டது.
பெரம்பலூரை அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி இளையராஜா (வயது40). இவரது தந்தை ரெங்கசாமி பெயரில் இருந்த 37 சென்ட் பூர்வீக பாத்தியதை நிலத்தின் கூட்டுப்பட்டாவை பெரம்பலூர் வட்டாசியர் அலுவலகத்தில் தவறுதலாக வேறு ஒருவர் பெயருக்கு பட்டாமாற்றம் செய்துகொடுத்துள்ளனர்.
இதனை அறிந்த இளையராஜா தனது தந்தை ரெங்கசாமி பெயரில் மீண்டும் பட்டாமாற்றம் செய்து புதிய பட்டா வழங்குமாறு பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு செய்திருந்தார். இந்த மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டாமாற்றம் செய்த புதிய பட்டா வழங்குமாறு பெரம்பலூர் தாசில்தாருக்கு வருவாய் கோட்டாட்சியர் உத்திரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் 31.5.2015 அன்று ரெங்கசாமி இறந்துவிட்டார். ஆகவே பட்டாமாற்றம் செய்த புதிய பட்டாவை ரெங்கசாமியின் வாரிசுகளான அவரது மகன்கள் பெயரில் வழங்குமாறு இளையராஜா மனு செய்திருந்தார். ஆனால் 37 சென்ட் நிலத்திற்கு பட்டா வழங்காமல் காலதாமதம் செய்ததுடன், இளையராஜாவை அலையவிட்டுள்ளனர்.
இதனால் மனஉளைச்சலும், மனதுன்பமும் அடைந்த இளையராஜா பெரம்பலூர் தாசில்தார் மீது மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
வழக்கு நிறைவில் மனுதாரர் இளையராஜாவை மனஉளைச்சல் மற்றும் பொருள்இழப்பீட்டுக்கு ஆளாக்கியதற்காக பெரம்பலூர் தாசில்தார் ரூ.10ஆயிரம் இழப்பீட்டுத் தொகையும், வழக்கு செலவிற்காக ரூ.3ஆயிரமும் 2 மாதத்திற்குள் வழங்குமாறு நேற்று உத்திரவிட்டனர்.
மேலும், இளையராஜா தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபடி பட்டாமாற்றம் செய்த பட்டாவை உடனே வழங்கவும் தாசில்தாருக்கு உத்திரவிட்டனர்.