Inquiry through prosecution in Gutka case: Minister Vijayabaskar can not escape! PMK Anbumani
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :
குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தடுக்கும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தான் பினாமி மூலம் இவ்வழக்கைத் தொடர்ந்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழலின் முதன்மை நாயகரே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்பது தமிழகத்திலுள்ள குழந்தைக்குக் கூடத் தெரியும். இந்த ஊழலில் காவல்துறை உயரதிகாரிகள் சிலர் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கு குட்கா நிறுவனம் கோடிக்கணக்கில் கையூட்டை வாரி வழங்கியதற்கான ஆதாரங்கள் வருமானவரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்டு, தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டன. அவ்வளவுக்குப் பிறகும் கையூட்டு வாங்கியவர்கள் பட்டியலில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை தவிர்த்து விட்டு, சாதாரண அதிகாரிகள் மீது மட்டும் தமிழக கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் காப்பாற்ற அரசு முயன்றதால் தான் இவ்வழக்கை உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு மாற்றியது.
குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதை எண்ணி கவலைப்படவில்லை; இந்த வழக்கின் விசாரணையை எதிர்கொள்வோம் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி.ஐ. விசாரணை குறித்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று வீரவசனம் பேசினார். ஆனால், நேரடியாக தமிழக அரசே மேல்முறையீடு செய்தால் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடிப்பது அம்பலமாகிவிடும் என்பதால், சிவக்குமார் என்ற சுகாதாரத்துறை அதிகாரியைக் கொண்டு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது தமிழக அரசு. மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ள சிவக்குமார், குட்கா ஊழலில் குற்றஞ்சாற்றப்பட்டு இருப்பவர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர். விஜயபாஸ்கர் தான் சிவக்குமாரின் பெயரைப் பயன்படுத்தி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
சிவக்குமார் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்று நேர்நின்றவர் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆவார். முகுல் ரோகத்கியின் ஒரு நாள் கட்டணம் என்பது சிவக்குமாரின் இரு ஆண்டு ஊதியத்திற்கு இணையானது ஆகும். அவரை நெருங்கி பேசுவதது கூட சிவக்குமரால் சாத்தியமில்லை. அதேநேரத்தில் முகுல் ரோகத்கி கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் தமிழக அரசுக்காக ஆஜராகி வருகிறார். அந்த நெருக்கத்தில் முகுல் ரோகத்கி மூலம் சிவக்குமார் பெயரில் உச்சநீதிமன்றத்தில் பினாமி ஆட்சியாளர்கள் தான் வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பதை மேற்கண்ட காரணங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
குட்கா ஊழல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விட்ட நிலையில், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த வழக்கில் சேர்க்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் உறுதியாகிவிட்டது. அதிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் பினாமி மூலம் மேல்முறையீட்டு மனுவை விஜயபாஸ்கர் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குத் தொடர்பான அனைத்து முக்கிய ஆவணங்களும் வருமானவரித்துறையிடம் உள்ளன. அதனால், உச்சநீதிமன்றத்தில் யார் பெயரில் எத்தனை மனுக்களை தாக்கல் செய்தாலும் கைது நடவடிக்கையை தாமதிக்க முடியுமே தவிர தவிர்க்க முடியாது. குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவதும், தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் உறுதியாகிவிட்டது.
பினாமி ஆட்சியாளர்களின் இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.