MLA Prabhakaran petitions Collector Venkatabriya about the unresolved issues in Perambalur constituency!
ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதியிலும், நீண்ட நாட்களாக தீர்க்கபடாத பிரச்சனைகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் எம்.எல்.ஏக்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் மனு கொடுத்து வருகின்றனர். அதன்படி, பெரம்பலூர் பிரபாகரன், கலெக்டர் வெங்கடபிரியாவிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியில், அமைச்சர் ஆ.ராசாவால் கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் ராஜீவ்காந்தி காவேரி கூட்டு குடிநீர் திட்டம், தற்போது மும்மடங்கு விரிவடைந்து விட்டது. அதோடு, குடிநீர் வரும் கிராமப் பகுதிகளின் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இதனால், பெரம்பலூர் நகர மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்க முடியவில்லை. அதனால், பெரம்பலூர் நகராட்சிக்கு தனி காவிரி – கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டும்,
தமிழகத்திலேயே பால் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் 2ம் இடத்தில் உள்ளது. ஆனால், கால்நடைகளுக்கு போதுமான தலைமை மருத்துவமனையோ, கால்நடை மருத்துவமனையோ கிடையாது. அதனால், பல்நோக்கு தலைமை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும், கிடப்பில் உள்ள மருத்துவக் கல்லூரியை தொடங்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட இளைஞர் – இளஞிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும்.பெரம்பலூர் கடலூர் மாவட்ட எல்லைப்பகுதிகளான வெள்ளுவாடி – கொரக்கவாடி பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பாலம் அமைக்க வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில், அம்மாபாளையம், பெரம்பலூர் டவுன், வேப்பூர், அகரம்சீகூர், வ.களத்தூர் பகுதிகளில் போலீஸ் ஸ்டேசன் கொண்டு வரவேண்டும், பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தை மேம்படுத்துவதோடு, வேப்பந்தட்டை, ஆலததூர், குன்னம் தாலுகா தலைநகரில் தீயணைப்பு நிலையங்கள் உருவாக்க வேண்டும்.
1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வாலிகண்டபுரம், வாலீஸ்வரர் கோயில் மற்றும் ரஞ்சன்குடி கோட்டை, சமாஸ்கான் மசூதி ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும், பூலாம்பாடி பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மழைநீரை சேமிக்கும் வகையில் கலிங்கா அணைக்கட்டு திட்டத்தினை கொண்டு வரவேண்டும்.
100 ஆண்டுகள் பழமை வாய்நத பெரம்பலூர் பேருந்து நிலையத்தை மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிதாக கட்டி சீரமைக்க வேண்டும், பெரம்பலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் 2-யை கொண்டு வரவேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு தனி விவசாயக் கல்லூரி கொண்டுவரவேண்டும், பாடாலூர் பகுதியில் அரசு கலைக்கல்லூரி கொண்டு வரவேண்டும், திருவாலந்துறை – கீழக்கல்பூண்டி கிராமத்திற்கும் இடையே வெள்ளாற்றில் பாலம் கட்டவேண்டும், பாடாலூர், வாலிகண்டபுரம் பகுதிகளில் 24 மணி நேர அதி நவீன விபத்திற்கான மருத்துவமைனை கட்ட வேண்டும்.
பாடாலூர், செட்டிக்குளம் ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், வெள்ளாற்றின் குறுக்கே, பாண்டகப்பாடி – நெய்குப்பை பகுதிக்கு பாலம் அமைக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை அடங்கி மனுவை வழங்கினார். அப்போது, டி.ஆர்.ஓ அங்கையர்கண்ணி, மாவட்ட திட்ட இயக்குனர் லலிதா உடனிருந்தனர்.