Namakkal District-level sports tournaments for Nov15th Handicapped people
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும்15ம் தேதி காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது.
இதையொட்டி கால், கை ஊனமுற்றோர், குள்ளமானோர்களுக்கு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடைபெறுகிறது.
இதேபோல் முற்றிலும் பார்வையற்றோர் மற்றும் மிக குறைந்த பார்வையற்றோருக்கு ஓட்டப் பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடைபெறுகிறது.
இதுதவிர கை, கால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, மேஜைப்பந்து போட்டிகளும், பார்வையற்றோருக்கு கைப்பந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.