Namakkal: Prospects for an allowance for Unemployed disabled
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினரைச் சேர்ந்தவர் என்றால் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
இந்த தகுதிகள் பெற்று புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களது அனைத்து கல்விச் சான்றுகள்(அசல், நகல்), வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணப் படிவம் சமர்ப்பிக்கவில்லை எனில் உதவித்தொகை நிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை அலுவலகத்தில் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் மீண்டும் சுய உறுதிமொழி ஆவணப் படிவத்தை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்தால், மீண்டும் அந்த காலாண்டு முதல் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.