NEET Exam the training of teachers in Namakkal scramble away!
நாமக்கல் அரசு ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற நீட் தேர்வு பயிற்சியை ஆசிரியர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக முதுகலை அறிவியல் பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுகிறது.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இதன்படி மாநிலம் முழுவதும் முதுகலை அறிவியல் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என மூன்று இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொத்தம் 283 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. 5 நாட்கள் இப்பயிற்சி நடைபெறுகிறது.
நாமக்கல் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன மையத்தில் உள்ள ஆசிரியர்கள் 1 மணி நேரம் பயிற்சியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:
ஆசிரிய பயிற்சி நிறுவனத்தில் உள்ள மையத்தில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கும், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கணித பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம், புதிய வினாத்தாள் வடிவமைப்பு போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலாமாண்டு, இரண்டாமாண்டு என இரண்டு பொதுத்தேர்வுகளுக்கு கற்பித்தல் மற்றும் மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
போட்டித் தேர்வு பயிற்சி என கூடுதல் பணிச்சுமை ஆசிரியர்களின் மீது திணிக்கப்படுவதால் வாரத்தின் 7 நாட்களும் ஓய்வின்றி கற்பித்தல் பணி மேற்கொள்வது உடல் நலம், குடும்ப நலனை பாதிக்கும். எனவே இப்பயிற்சியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
விலக்கு அளிக்காவிட்டால் நாங்கள் அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளமாட்டோம் என தெரிவித்தனர்.