NEET: P.M.K. to the family of a student who committed suicide. Rs 10 lakh fund on behalf of: Party President GK Mani announcement.

பா.ம.க. தலைவர் கோ.க.மணி விடுத்துள்ள அறிவிக்கை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலவந்தங்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மன உளைச்சலால் தற்கொலை கொண்டது தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரும், நானும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளோம்.

மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்திருக்க வேண்டிய இளம்தளிர் நீட் என்ற நெருப்பால் கருக்கப் பட்டிருக்கிறது. மருத்துவராகி விட வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடிய மாணவன், தமது கனவு நனவாகாதோ என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது. நீட் என்ற நெருப்பால் இன்னும் எத்தனை மாணவ, மாணவியரின் மருத்துவக் கனவு பொசுங்கப் போகிறதோ? என்ற கவலை மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த அச்சத்தையும், கவலையையும் போக்குவதற்கு ஒரே வழி நீட் தேர்வுக்கு முடிவுரை எழுதுவது தான். நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்; பயன்கள் எதுவும் இல்லை என்பதை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு கடுமையாக வலியுறுத்த வேண்டும்.

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட மாணவன் விக்னேஷ் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் வலியுறுத்தியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ. 7 லட்சம் நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பா.ம.க. நிர்வாகிகள் சந்தித்து நிதியுதவியை வழங்குவர். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதே நேரத்தில் மாணவர்கள் எவரும் தற்கொலை போன்ற முடிவுகளை உணர்ச்சி வேகத்தில் எடுத்து விடக் கூடாது என்றும் பா.ம.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!