Nirmala Devi Affair – Chennai High Court ordered Outbreak
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில், சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும், அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என்றும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்த புரட்சிகர மாணவர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், மீண்டும் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்தார்.
அதில், சிபிசிஐடி விசாரணை முடிவடையும் வரையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரணை அறிக்கையை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வில் முன்னிலையில் வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவரே, விசாரணை ஆணையம் அமைத்து, அதன் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதாக இருக்காது என வாதிட்டார்.
இதற்கு, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், ஆளுநருக்கான அதிகாரத்தின்படியே குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும்,சிபிசிஐடி விசாரணைக்கும், சந்தானம் குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சந்தானம் குழு, தனது விசாரணை அறிக்கையை, சீலிடப்பட்ட கவரில் வைத்து ஆளுநரிடம் வழங்கலாம் என்றனர்.
அதேவேளையில், அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என்றும், அதன் நகல்களையோ, அதுகுறித்த விவரங்களையோ வெளியிடக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குறிப்பாக, ஊடகங்கள் கைக்கு, சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்காத வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் ஆணையிட்ட நீதிபதிகள், வருகிற ஜூன் 4ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.