No matter who Prime Minister Modi lays hands on, the person is gone! Accusation of A.Raja who spoke in support of the candidate Thol.Thirumavalavan!
விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பி தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளருமான தொல்.திருமாவளவனை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராஜா குன்னம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியதாவது:
கொள்கை தங்கம் என்றும், இந்த கூட்டணிக்கு திருமா ஒரு மணிமகுடம் என்றும் முதல்வர் பேசுகிறார். சாதித்தலைவராக பார்க்கப்பட்ட திருமா, இப்போது சாதித்தலைவராகவும், சாதிக்க வேண்டுமென்ற தலைவராகவும் பார்க்கிறார்கள்! சாதியத்தை ஒழிப்பதற்காக புறப்பட்ட ஒரு இளைஞன் இன்றைக்கு விரிந்து வளர்ந்து இந்திய பூபாலத்தில் ஒரு தேசிய தலைவராக நிற்பதை நான் மனதார ஒப்புக் கொள்கிறேன்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சாதியை அடிப்படையாக வைத்து ஒரு கட்சி துவங்குவது தப்பில்லை! ஆனால் அந்த கொள்கையில் கடைசி வரை அந்த சாதியை விற்காமல் இருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளாமல் தாய் தந்தையரை தாண்டி, நான் தமிழை நேசிக்கின்றேன் என்று சொல்லுகின்ற ஒரு பச்சை தமிழனை இந்த மண்ணிலே நாம் வேட்பாளராக பெற்று இருக்கிறோம். எனவே, சாதி கடந்து மதம் கடந்து பெரியாரையும், அம்பேத்கரையும் உள்வாங்கி இன்றைக்கு கொள்கை ரீதியாக இடதுசாரி சிந்தனையோடு மோடியை முட்டி மோதுகின்ற ஒரு சிறுத்தையாக நாடாளுமன்றத்திலே அவரை நான் பார்க்கிறேன்.
இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர், எழுச்சித் தமிழர், அன்பிற்குரிய சகோதரர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறோம். அவருடைய வெற்றி உறுதியான வெற்றி என்றாலும் கூட சம்பிரதாயத்திற்க்காவது உங்களை எல்லாம் பார்த்து, அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்க வேண்டிய கடமை நிச்சயமாக எனக்கு இருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக திருமாவுடன் பழகி வருகிறேன். அன்றைக்கு இருந்த திருமாவையும் இன்றைக்கு இருந்த திருமாவையும் பார்க்கிறேன்.
ஒரு சின்ன சிட்டிகைக்குள் ஏற்றி வைத்த விளக்கு அகில இந்தியாவிற்கும் அணையா விளக்காக, இவர் இந்த சாதிக்கு தான் தலைவர் இவரை கூட்டணியில் வைத்துக் கொண்டால் மற்ற சாதிக்காரர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்களா என்ற ஐயம் எல்லாம் இருந்த காலம் போய், அவர் இருந்தால் தான் இந்த கூட்டணிக்கு கொள்கை வலு என்று சொல்கிற அளவில் இருக்கிறார்.
திராவிட சித்தாந்தத்தை தூக்கிப் பிடிக்கிற அறிவு சார்ந்த இயக்கம் திமுக! இந்தியாவில் இருக்கிற எல்லா முதலமைச்சரும், தலைவர்களும் பயந்து போய் இருக்கிற போது, அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிவிட்ட நிலையில் அடங்காமல் முழங்குகின்ற ஒரே சிங்கம் திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்ற தமிழகத்தின் நம்பர் ஒன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றார்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இந்தியாவில் எந்த முதல்வரும் நான்காயிரம் கொடுக்கவில்லை! தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான் சொன்னபடி வழங்கினார். மாதம் மாதம் மகளிர் உரிமை தொகை கொடுக்க முடியுமா என பல்வேறு தரப்பினரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி தமிழக முதல்வர் ஒரு வருடமாக மகளிர் உரிமை தொகை வழங்கி வருகிறார்.
அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து வசதி குறித்து பேசிய ஆ.ராசா, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை அறிந்த கனடா நாட்டின் பிரதமர், கனடாவிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என பெருமிதம் தெரிவித்தார்.
காலையில் மல்லிகைப்பூ வாங்குவதற்கும், மாலையில் தேநீர் அருந்துவதற்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிப்பதாக தெரிவித்த ஆ. ராசா, எல்லாம் ஃப்ரீ எந்த முதல்வராவது இதனை செய்திருக்கிறாரா? என கேள்வி எழுப்பினார். பனிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரி படிப்பை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குவதாக தெரிவித்த ஆ. ராசா, அது என்ன திட்டம் என்று மேடையில் நின்று இருந்தவர்களை பார்த்து கேட்டு தெரிந்து கொண்டு புதுமைப்பெண் திட்டம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கும் அந்தத் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா எவ்வளவு பெரிய ஆபத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தத் தேர்தலை நீங்கள் விட்டு விட்டால், இந்தியா இருக்காது அரசியல் அமைப்பு இருக்காது, நீங்கள் நீங்களாக இருக்க மாட்டீர்கள், நாங்க நாங்களாக இருக்க முடியாது.
மோடி யார் மீது கை வைத்தாலும் ஆள் ஒழிந்தான் என்றும், சசிகலா மீது கை வைத்ததால் அவர் முடிந்து விட்டார். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை தொட்டு கும்பிட்டதால் அதுவும் முடிந்து விட்டது. தற்போது அரசியல் சட்டத்தை 3 மாதத்திற்கு பின்னர் தொட்டிருக்கிறார். தொட்டுவிட்டு இப்போது சொல்கிறார் அரசியல் சட்டத்தை மாற்ற போகிறேன் என்று… இவ்ளோ பெரிய அரசியல் சட்டத்தை உருவாக்கினதால்தான் நாம் 75 ஆண்டு காலமாக வேற்றுமையிலும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
கேள்வி நேரத்தின் போது, பாராளுமன்றத்திற்கு பிரதமர்கள் வருவதை கடந்த 32 ஆண்டு காலமாக பார்த்து வருவதாகவும், ஆனால் மோடி கேள்வி நேரத்தின் போது ஒரு நாள் கூட வந்ததில்லை என குற்றம் சாட்டினர். வரவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு குற்றச்சாட்டு வந்தல் அதனை எதிர்கொள்ள வேண்டுமல்லவா? எதிர்கொள்ள யோகிதை இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
10க்கும் மேற்ப்பட்ட நாடுகளுக்கு பிரதமர் அழைத்து சென்ற அதானி பிராடு செய்து விட்டார் என்று கூறுகிறார்களே பதில் சொல்லுங்கள் என நாடாளுமன்றத்தில் கேட்டேன் ஆனால் இதுவரை பதில் சொல்லவில்லை! நஷ்டத்தில் இயங்கக்கூடிய 35 கம்பெனிகள் மூடிக்கும், பிஜேபிக்கும் 2000 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்திருக்கிறார்களே வந்து பதில் சொல்லுங்கள் என்றால், இதுவரை சொல்லவில்லை!
இப்படி ஊழல் ஒரு பக்கம், மதவெறி ஒரு பக்கம் இதனை தட்டிக் கேட்பதற்கு இந்தியாவில் யாருமே இல்லை! இருப்பது ஒரே ஒரு தலைவர் தான் அது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றார். தான் திருமாவை வியந்து பார்ப்பதாகவும் அவர் தேசம் காப்போம் என போட்ட மாநாட்டில் எழுப்பிய குரல் மு. க.ஸ்டாலின் மூலம் அகில இந்திய அளவில் ஒலிக்கிறது என்றார்.
திருமா என்கிற தத்துவ வாதியும், சித்தாந்த வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தத்துவ தலைவராக இருக்கின்ற மு.க. ஸ்டாலினும் ஓரிடத்திலே கொள்கையில் பயணித்து வடக்கு இந்தியாவை பார்த்து உங்களை நாங்கள் மாற்றியே தீருவோம் என சபதம் எடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த சபதத்தை நிறைவேற்றுகிற கடமை உங்களுக்கு நிச்சயமாக இருக்கிறது.
ஆகவே திருமா அவர்களுக்கு பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள், திருமா நாடாளுமன்றத்திற்கு போனால் குன்னத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஏக இந்தியாவிற்கும் ஒரு மிகப்பெரிய சமூகப் போராளியை, சமூகப் புரட்சியாளனை நீங்கள் அனுப்பி வைக்கிறீர்கள் என்று பொருள்!
எனவே அந்தப் போராளியை நீங்கள் அனுப்பி வையுங்கள் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம், பானை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், மாவட்ட பொறுப்பாளர் வீ ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி,, வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் அழகு நீலமேகம், பட்டுச்செல்வி ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்ஹரிபாஸ்கர், தலைமை கழக பேச்சாளர் வரகூர் காமராஜ், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மா.பிரபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் உமா சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.