Non-standard food in Perambalur District Veppur Government College Hostels: It is a pity to eat in hotels for money!

பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியான, வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடலூர், அரியலூர், சேலம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் இளநிலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.

தொலை தூரங்களில் இருந்து வரும் மாணவிகள் மற்றும் பேருந்து வசதி இல்லாத கிராமங்களில் இருந்து வரும் மாணவிகளின் வசதிக்காக இந்த பகுதியில் தமிழக அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 3 கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி விடுதிகளில் தாலா சுமார் 100 மாணவிகள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கி உள்ள மாணவிகள், தங்களுக்கு தரமான உணவு மற்றும் சரியான நேரத்திற்கு கிடைக்காததால் ஹோட்டல்களில் பணம் கொடுத்து சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து விசாரித்தபோது விடுதியில் தரமான சாப்பாடு வழங்கப்படுவதில்லை என்றும் அதுவும் முறையான சரியான நேரத்திற்கும் கிடைப்பதில்லை என்றும் மாணவிகள் தரப்பில தெரிவித்துள்ளனர்.

வேப்பூரில் செயல்பட்டு வரும் இந்த மகளிர் கல்லூரி காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.45 மணி வரை தொடர்ச்சியாக செயல்படுகிறது. இடையில் 12 மணி முதல் 12.30 வரை அரை மணி நேரம் மட்டும் இடைவேளை விடப்படுகிறது. மேலும் முதலாமாண்டு மாணவிகளுக்கு 2.45 மணிக்குதான் கல்லூரி முடிவடைகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் மாணவிகளுக்கு சாப்பிடுவதற்கு போதிய நேரம் கிடையாது.

கல்லூரியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளுக்கு நடந்து வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டும் மீண்டும் கல்லூரிக்கு செல்ல முடியாது. இதனால் கல்லூரி முடிவடைந்த பிறகு சுமார் 3 மணிக்கு விடுதிக்கு வந்து மதிய உணவு சாப்பிட வேண்டிய கட்டாயம். மாணவிகளுக்கு அரசு கொடுத்துள்ள உணவு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்யும் விடுதி காப்பாளர் உள்ளிட்ட பணியார்கள் தரமற்ற உணவை வழங்குவதாலும், மதியம் விடுதிக்கு வந்த செல்ல நேரம் இல்லை என்பதாலும், வேறு வழியின்றி காலையில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மதியம் அதே ஹோட்டலில் பார்சல் வாங்கிக்கொண்டு, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இது ஒரு புறமிருக்க மாணவிகள் விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்று வருவதற்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களாகவே நடந்து சென்று மீண்டும் நடந்தே விடுதிக்கு வருகின்றனர். இவர்களை ஒன்றாக அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவதற்கு விடுதி காப்பாளர்கள் உதவியாளர்களும் தயாராக இல்லை. மேலும் காப்பாளர் உள்ளிட்ட விடுதிப் பணியாளர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் கல்லூரி விடுதிகளில் தங்குவது இல்லை. விடுதியில் மாணவிகள் தனியாக தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இளம் பெண்கள் இந்த வயதில் முறையான சத்தான உணவை உட்கொண்டால் மட்டுமே எதிர்காலத்தில் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பேறு, எலும்பு தேய்மானம், நோய்த்தொற்று, அல்சர் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பதால், தமிழக அரசு இதில் போதிய கவனம் செலுத்தி முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!