perambalur : On behalf of the government relief fund for farmers affected by drought

பெரம்பலூர் : 2016-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகக் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் இது வரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் விவரம் சேகரிக்கப்பட்டது.

இதனடிப்படையில், 33 சதவீதத்திற்கு மேல் 50 இலட்சத்து 35 ஆயிரத்து 127 ஏக்கர் நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டு, 32 இலட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு, நெற்பயிர் மற்றும் இதர பாசனப் பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 5,465- ரூபாய், மானாவாரிப் பயிர்களுக்கு 3,000-ரூபாய், நீண்டகாலப் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 7,287- ரூபாய் மற்றும் பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு 3,000- ரூபாய் என்ற அடிப்படையில் இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக 2 ஆயிரத்து 247 கோடி ரூபாய் வழங்க 21.2.2017 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து 6.3.2017 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி 31 மாவட்டங்களை சார்ந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டமாக பிர்காவிற்கு ஒரு விவசாயி வீதம் 11 விவசாயிகளுக்கு ரூ.78,806 மதிப்பிலான நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் ( பெரம்பலூர் ), ஆர்.டி.இராமச்சந்திரன் ( குன்னம்) ஆகியோர் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 83,394 விவசாயிகளின் 79,000 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.64.96 கோடி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் வங்கிக் கணக்குகளில் நிவாரண உதவித் தொகையினை வரவு வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஒருவார காலத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் வங்கக் கணக்குகளில் நிவாரணத்தொகை வரவு வைக்கப்படும், என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!