Path to Private Plats through Lake Soil: Public strike on the road Namakkal – Paramati
நாமக்கல்: ஏரியில் மண் எடுத்து தனியார் வீட்டுமனைகளுக்கு செல்ல பாதை அமைப்பதாக புகார் எழுப்பிய மக்கள் நாமக்கல் – பரமத்தி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால, சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல் நகராட்சி 17வது வார்டு காவேட்டிப்பட்டியில் ஏரி அமைந்துள்ளது.இந்த ஏரிக்கரை பலப்படுத்த கடந்த வாரத்திற்கு முன் பூமி பூஜை போடப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் மூலம், ஏரியின் அருகே உள்ள தனியார் வீட்டுமனைகளுக்கு செல்வதற்கு சாலை அமைப்பதாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பினர்.
எனினும், ஏரிக்கரை பலப்படுத்துவதாக கூறி தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதைக்கண்டித்து நேற்று ஏரியில் இருந்து மண் எடுத்து வரும் லாரியை காவேட்டிப்பட்டி கிராம மக்கள் சிறைபிடித்தனர். மேலும், ஏரிக்கரையை ஒட்டி நாமக்கல் – பரமத்தி சாலையில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் போலீஸார், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்.
இதையடுத்து மக்கள் தங்களது சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நாமக்கல் -பரமத்தி சாலையில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.