Perambalur: 12,042 petitions have been received for the Stalin project with you; Collector informs!

தமிழ்நாடு முதலமைச்சரால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்திலும், 15.07.2025 அன்று முதல் சிறப்பு முகாம் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கரால் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் இதுவரை 12 முகாம்கள் நடந்தது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு தேவைகள், கோரிக்கைகள் வேண்டி 12,042 மனுக்கள் அளித்துள்ளனர். குறிப்பாக இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி 4,409 மனுக்கள் அளித்துள்ளனர். இம்மனுக்கள் அனைத்தும் இணையவழியாக பதிவேற்றம் செய்து தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் முகாம் நாள் அன்றே பல்வேறு விண்ணப்ப மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.

மேலும், இன்று (24.07.2025) நகர்புறம் பகுதிகளுக்கான முகாம், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அரியலூர் மெயின் ரோடு, பள்ளிவாசல் தெருவில் உள்ள கர்னிஷ் திருமண மண்டபத்திலும், ஊரக பகுதிகளுக்கான முகாம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அந்தூர் மற்றும் வரகூர் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கு அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இம்முகாம்களில்1,592 மனுக்கள் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 25.07.2025 (வெள்ளி) அன்று பூலாம்பாடி பேரூராட்சியில், வார்டு எண் 9 முதல் 15 வரை உள்ள பொதுமக்களுக்கு சீனிவாசா பெருமாள் கோயில் திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிக்குளம், குரூர், மாவிலங்கை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டார் திருமண மண்டபத்திலும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 09.00 மணியிலிருந்து மதியம் 03.00 வரை நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, தேவையான ஆவணங்களை இணைத்து முகாம் நடைபெறும் தினத்தன்று, முகாம்கள் நடைபெறும் இடத்திற்கு சென்று மேற்படி விண்ணப்பங்களை அளித்து அரசின் பல்வேறு சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!