Perambalur: 79th Independence Day celebrations; Collector S. Arunraj hoisted the national flag and distributed welfare assistance.
இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது. கலெக்டர் ச.அருண்ராஜ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பச்சேரா, டி.ஆர்.ஓ மு.வடிவேல் பிரபு, பெரம்பலூர் எம்.எல்.ஏ ம.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர், போலீஸ் எஸ்.பி. சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்களையும், தேசியக் கொடி நிறத்திலான மூவர்ண பலுான்களையும் பறக்கவிட்டனர். தொடர்ந்து, காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 30 காவலர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும், பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் செய்தியாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இன்று நடைபெற்ற அணிவகுப்பில் ஆயுதப்படை ஆய்வாளர் ஜி.மகேஷ் தலைமையில், முதலாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஏ.சீமான், இரண்டாம் படைப்பிரிவிற்கு பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜி.கமலி, மூன்றாம் படைப்பிரிவிற்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆர்.சுந்தரபாண்டியன், ஊர்காவல் படை முதலாம் படை பிரிவுக்கு ஊர்காவல் படை உதவி படைப்பிரிவு தளபதி யூ.ஆல்பர்ட், இரண்டாம் படைப்பிரிவிற்கு ஊர்காவல் படை படைப்பிரிவு தளபதி ராணி ஆகியோர் தலைமையேற்று வழி நடத்தி சென்றனர்.
பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 78 லட்சத்து 98 ஆயிரத்து 441 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அனைத்து துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தமிழறிஞர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.