Perambalur: Applications can be submitted for the exemplary transgender award; Collector informs!

தமிழ்நாடு அரசால் ஏப்ரல் 15-ஆம் நாள் திருநங்கை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து அவர்களுள் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருது தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற விரும்புபவர்கள் அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கையாக இருத்தல் வேண்டும். மேலும், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதாரத்திற்கான ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவி செய்திருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு திருநங்கை நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

இந்த விருது பெற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய திருநங்கைகள், https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 18.02.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்பத்தாரர் தங்களது கருத்துரு, விரிவான தன் விவரக்குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்கள் அடங்கிய தகவல்களை தமிழ் 2 பிரதிகள் மற்றும் ஆங்கிலத்தில் 2 பிரதிகள் புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் வழங்க வேண்டும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள், சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகி கருத்துருக்கள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தொலைபேசி எண் 04328-296209 என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திடுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!