Perambalur: Attempt to hack to death a person who opposed the love of a sister in law! Horror in front of the school in broad daylight!!

பெரம்பலூரில் மச்சினிச்சியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்டோ டிரைவரை மழலையர் பள்ளி முன்பு ஒரு கும்பல் பட்டப்பகலில் பள்ளி அருகே
சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம், எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் காசிராஜன் மகன் ரவி (38) ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணை திருமணம் செய்த நிலையில், சின்ன மாமியாரின் மகள் மகாலட்சுமி என்பவரையும் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கவுல்பாளையம், காளியம்மன் நகரைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகள் ஸ்வேதா (23), என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்த ரவி, பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் வாடகை வீட்டில் 3வது மனைவி ஸ்வோதாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று மாலை பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக தனது ஆட்டோவில் பெரம்பலூர் கடைவீதி பகுதியில் சிவன் கோயில் அருகே சென்ற போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த இருவர் திடீரென ஆட்டோவை வழி மறித்து, அரிவாளால் சரமாரியாக ரவியை தலை மற்றும் கழுத்து கைப்பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்று தலைமறைவாகி விட்டனர். இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரவியின் 3வது மனைவி ஸ்வேதாவின் தங்கை மஞ்சு (18) என்பவரை கவுல்பாளையம் காளியம்மன் நகரை சேர்ந்த பழனிவேல் மகன் விக்கி என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த காதலுக்கு, ஸ்வேதாவும் அவரது கணவர் ரவியும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த விக்கி தனது நண்பருடன் பைக்கில் வந்து, அரிவாளால் ரவியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது தெரிய வந்ததையடுத்து கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட விக்கியையும், அவனது கூட்டாளியையும் பெரம்பலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மழலையர் பள்ளி நுழைவு வாயில் முன்பு நிகழ்ந்த இந்த கொடூர கொலை முயற்சி சம்பவம் பள்ளி சிறார்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!