Perambalur: Chennai Dinamalar news reaction : Collector admitted students without Aadhaar!
பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பென்னக்கோணம் ஊராட்சியைச் சேர்ந்த 8ம் வகுப்பு பயிலும் மாணவன் மணிகண்டன் மற்றும் அவரது சகோதரரான 7ம் வகுப்பு பயிலும் செல்வமணி ஆகியோர், சில வாரங்களாக பள்ளிக்கு செல்லவில்லை எனவும், அவர்களுக்கு ஆதார் அட்டை இல்லாததால் பள்ளியில் சேர முடியாததால், வீட்டிலேயே இருந்தனர். இது குறித்து சென்னை தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
மாணவர்களின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும், தாய் உடல்நலக்குறைவால் 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிடவே, இருவரும் அவர்களது பாட்டியுடன் வசித்து வந்துள்ளனர். வயதான பாட்டியால் இவர்களை கவனித்துக்கொள்ள இயலாத நிலையில், முறையாக வழிகாட்டவும் ஆள் இல்லாமல் சில வாரங்களாக பள்ளி செல்லாமல் இருந்துள்ளனர்.
இந்த இரு மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்துவரச் செய்த கலெக்டர் தனது அருகே அவர்களை அமரவைத்து, ” படிப்பு மட்டுமே நமக்கான சொத்து. எந்த காரணத்திற்காகவும் படிப்பதை நிறுத்திவிடக்கூடாது. உங்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்கின்றேன். மாதம் ரூ.2000 பெறும் வகையில் அரசின் உதவித்தொகை உங்களுக்கு கிடைக்க உத்தரவிட்டுள்ளேன். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மதியம் சத்துணவுத்திட்டம், படிப்பதற்கு தேவையான புத்தகங்கள், புத்தகப்பை உள்ளிட்ட அனைத்தும் அரசால் கொடுக்கப்படுகின்றது. நீங்கள் நன்றாக படித்தால் மட்டும் போதும்” என எடுத்துரைத்தார்.
மேலும், ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிடும் திட்டமான ”அன்புக்கரங்கள்” திட்டத்தின் மூலம் இந்த இருவருக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கிட உத்தரவிட்ட கலெக்டர் அருண்ராஜ், இவர்களைப் போன்று பெற்றோரை இழந்த நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகள், குடும்ப சூழலால் பள்ளிசெல்லாமல் இருக்கும் மாணவ மாணவிகள் குறித்த தரவுகளை 24 மணி நேரத்திற்குள் வழங்கிட வேண்டும் என்றும், அவர்கள் படிப்பதற்கு எந்த வகையிலான உதவி தேவைப்படுகின்றது என்பது குறித்தும் தகவல்களை சேகரிக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
உதவி தேவைப்படும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு சென்று முறையாக கல்வி கற்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார். வருவாய் மற்றும் கல்வி துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கல்வித் துறையில் பணியாற்றுபவர்கள் எவ்வளவு சமூக அர்பணிப்புடன் பணியாற்றுகின்றனர் என்பதற்கு இந்த செய்தியும் ஓர் உதாரணம். 2 ஆதார் கார்டு எடுக்க எவ்வளவு செலவாகிவிடும். 200 ரூபாயை செலவிடும் அளவிற்கு கூட சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும், தானதர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அப்பகுதியில் இல்லையா என பொதுமக்கள் வினா எழுப்புகின்றனர்.