Perambalur: Christian church workers can apply for membership in the Welfare Board; Collector’s information!

தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் / மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்வதற்கு உறுப்பினர்கள் விண்ணப்பப்படிவம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்று, சாதிச் சான்று, பள்ளிச் சான்று மற்றும் ஞானஸ்தான சான்றுகளின் நகல்களை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மேலும், இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். அதாவது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை படித்து வரும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.1,000, 10,11,12 ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,000, 10,11,12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,000, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,25,000, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரையிலும், இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.30,000, ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000, திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000, மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000, கருச்சிதைவு / கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3,000, கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.750 (அதிகபட்சம்), முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,200 ஆகிய உதவித்தொகைகள் தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்படி இந்நலவாரியத்தில் தகுதியுடைய நபர்கள் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறுமாறு கலெக்டர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!