Perambalur: Collector Arunraj inaugurated the work of planting 10,000 saplings on roads under the Highways Department in the district!
பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடப்பாண்டில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விதமாக செஞ்சேரி முதல் கோனேரிபாளையம் செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், நாட்டு வகை மரக்கன்றுகளை, கலெக்டர் ச.அருண்ராஜ் நட்டு தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், பசுமைப் போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதந்தோறும் நடைபெறும் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர், பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், தங்கள் துறையின் மூலமாக அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் முன்னெடுப்பாக நெடுஞ்சாலைத்துறையின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள், மாவட்ட முக்கிய இணைப்பு சாலைகளில் பெரம்பலூர் உட்கோட்டத்தில் 3,500 மரக்கன்றுகளும், குன்னம் உட்கோட்டத்தில் 3,500 மரக்கன்றுகளும், வேப்பந்தட்டை உட்கோட்டத்தில் 3,000 மரக்கன்றுகளும் என மொத்தம் 10,000 நாட்டு வகை மரங்களான வேம்பு, மகிழம், மகோகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கலைவாணி, உதவி கோட்டப்பொறியாளர்கள் தமிழமுதன், பாலசுந்தரம், கோமதி, உதவிப் பொறியாளர்கள் விக்னேஷ் ராஜ், ராஜா, பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்ரமணியன், மற்றும் சாலை ஆய்வாளர், சாலை பணியாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.