Perambalur: Collector held Gram Sabha meeting for duty; No action taken despite petitioning Gram Sabha 3 times! Public anguish!!

பெரம்பலுர் மாவட்டத்தில் கடந்த அக்.2 அன்று நடத்த வேண்டிய கிராம சபைக் கூட்டம் விடுமுறை என்பதால் இன்று மாவட்டத்தில் உள்ள 121 கிராமங்களிலும் நடந்தது. வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தளி கிராமத்தில் இன்று கலெக்டர் மிருணாளினி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் உரையாடியதை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கூட்டத்தில், கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து பொதுமக்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது, இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் (Derogatory Caste Name) கொண்ட குக்கிராமங்கள் சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துக்களின் பெயரை மாற்றுதல் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது,

கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே மைக்கில் பேசினார். பொதுமக்களுக்கு மைக் கொடுக்கப்படவில்லை. இதனால், பேச்சு சுகந்திரம் வெளிப்படையானதாக இல்லை. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை வாசித்து செலவுகள் குறித்து பொதுமக்களிடையே ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடந்த 3 கிராம கூட்டங்களில் மனு கொடுத்தும் அந்த ஊரில் உள்ள நடுவீதிக்கு குடிநீர் தொட்டி பழுதடைந்ததை சரிசெய்யவில்லை. தெருவில் ஆங்காங்கே சாக்கடை ஓடுகிறது.
சாக்கடை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் மனு எழுதி கொடுங்கள் என்றார், ஆனால், பொதுமக்களோ ஏற்கனவே கொடுத்த மனுவிற்கு எந்த நடவடிக்கை இல்லை. எத்தனை முறை ஒரே விசயத்திற்கு மனு கொடுப்பது என கொடுக்க முடியாது தெரிவித்தனர்.

மேலும், சித்தளி வனப்பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குரங்குள் கூட்டம் கூட்டமாக வந்து வீட்டில் உள்ள பொருட்களையும், வயலில் உள்ள விளைபொருட்களையும் சூறையாடி வீணாக்கி வருவதாகவும், பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பெரும் துன்பப்படுகிறோம் என தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த வனத்துறையினர் ஊராட்சி நிதியில் இருந்து குரங்குகளை பிடித்து வேறொரு காப்பு வீட்டில் விட்டு விடலாம் என பதிலளித்தனர். ஆனால், ஊராட்சியில் போதுமான பணம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

கிராம சபைக் கூட்டம் குறித்து முறையான தகவல்கள் தெரியாததால் ஏராளமான இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை. 100 நாள் வேலை சென்றவர்களை வைத்து கிராம சபைகூட்டம் பெயரளவிற்கு நடத்தி முடிக்கப்பட்டது. இதனால், பெரிதாக பொதுமக்களுக்கு பயன்கிடையாது என தெரிவித்தனர். இது போன்ற கூட்டங்களை நடத்துவதற்கு நடத்தாமலேயே இருக்கலாம் பஞ்சாயத்து பணமாவது மிச்சமாகும் என தெரிவித்தனர்.

மேலும், முன்னதாக இருந்த கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் மாவட்ட மக்களின் வளர்ச்சியை 11 மாதமாக வீணடித்து வளர்ச்சியை பின்னோக்கி எடுத்து சென்றார். தற்போது உள்ள கலெக்டர் மிருணாளினி எத்தனை மாதங்களை ஒப்பேத்த போகிறாரோ! பொதுமக்கள் வேதனையுடன் கலைந்து சென்றனர். முன்னாள் கலெக்டராக இருந்து கற்பகத்தை போன்று சமூக அக்கறை உள்ள கலெக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், ஆர்.டி.ஓ அனிதா, வேளாண்மை இணை இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எம்.செல்வம், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அறிவழகன், வனத்துறை அலுவலர் அருணாஶ்ரீ உள்பட அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!