Perambalur: Collector helps marginalized students for their education; Provides Rs. 2.66 lakhs as aid to 2 from discretionary fund!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் .ச.அருண்ராஜ் ஏழ்மை நிலையில் உள்ள 3 மாணவியர்களுக்கு கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை மற்றும் நெட் தேர்வு பயிற்சி புத்தகங்களை இன்று வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த சந்திரமதி என்பவர் தனது தந்தை இறந்து விட்டதாகவும், தாயும் சிறுவயதிலேயே விட்டுச் சென்றதாலும், தாத்தா, பாட்டி அரவணைப்பில் பள்ளி படிப்பு முடித்து, கல்லூரி படிப்பு தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்க பெற்று பயின்றதாகவும், கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த போதிய நிதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த வாரம் மனு அளித்தார். மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து கல்வி கட்டணமாக ரூ.75,000த்திற்கான ஆணையினை மாணவிக்கு இன்று வழங்கினார்.

கல்வி கட்டண நிதி உதவி பெற்ற மாணவி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் என்னுடைய ஏழ்மை சூழ்நிலையை உணர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அழியாத செல்வமான கல்வி கற்பதற்கு மிகப்பெரும் வாய்ப்பை உரிய நேரத்தில் ஏற்படுத்தி கொடுத்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றியை தங்களுக்கும், தமிழக அரசுக்கும் தெரிவிப்பதாக கூறினார்.

மேலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட வேள்விமங்கலத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரியான தீபிகா நெட் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், மிக ஏழ்மை நிலையில் குடும்ப சூழ்நிலை உள்ளதால் நெட் தேர்வுக்கான அனைத்து வகையான பயிற்சி புத்தகங்கள் வாங்குவதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லாமல் தவித்து வருவதாகவும், இப்பயிற்சி புத்தகங்கள் வாங்குவதற்கு உதவி செய்து உதவிடுமாறு கலெக்டரிடம் மாணவி மனு அளித்தார். மாணவியின் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் இன்று அம்மாணவிக்கு தேசிய அளவிலான தகுதி தேர்வுக்கான அனைத்து பயிற்சி புத்தகங்களையும் இலவசமாக வழங்கினார்.

புத்தகம் பெற்றுக் கொண்ட மாணவி தீபிகா கூறுகையில் கல்வி கற்பது தொடர்பான எந்த வகையான உதவியானாலும் எந்நேரத்திலும் கலெக்டர் செய்து வருவதாக அறிந்து மனு அளித்தேன். மனு அளித்த மறு வாரமே பயிற்சி புத்தகங்கள் வழங்கி உதவிய ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் காஞ்சலிக்கொட்டாய் நாகமங்கலம் கிராமத்தில் இருந்து, குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கலைவாணி என்ற மாணவி 12ம் வகுப்பு முடித்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் மூலமாக பீகார் மாநிலம், பாட்னா என்.ஐ.எப்.டி கல்லூரியில் இளங்கலை பேஷன் டெக்னாலஜி சேர்வதற்கான இடம் கிடைக்கப் பெற்றது. இக்கல்லூரியில் பயில்வதற்கான கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், செலுத்த முடியாமல் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும் கல்வி கற்பதற்கு உதவிடுமாறு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இடமும் மாணவி மனு அளித்தார். மாணவியின் மனு மாவட்ட கலெக்டருக்கு அனுப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாணவி படிப்பிற்கான ரூ.1,91,700க்கான முழு செலவினங்களையும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகளின் மூலம் வழங்குவதற்கான ஆணையை இன்று கலெக்டர் வழங்கினார்.

உதவித்தொகை பெற்றுக்கொண்ட மாணவி கலைவாணி கூறுகையில் இவ்வளவு பெரிய தொகை எப்படி கட்டுவது என்று கவலையுடன் இருந்த போது இதுபோன்ற மாணவியர்களுக்கு தமிழக அரசு உதவி வருவதாக அறிந்து போக்குவரத்து துறை அமைச்சரிடம் மனு அளித்தேன். மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு இன்று கலெக்டரிடம் கல்வி உதவித்தொகைக்கான ஆணையினை பெற்றுள்ளேன். நான் அறிந்த வகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி பெண்கள் பயில்வதற்கான அனைத்து வகை உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. என் வாழ்க்கை முன்னேற இப்பேருதவி அளித்த தமிழக அரசுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!