Perambalur Collector is invited to apply for poultry development program
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கோழிப்பண்ணை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடைக் கோழிவளர்ப்புத்திட்டம் 2018 -19 ம் ஆண்டிற்கு செயல்படுத்திடும் பொருட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 200 பெண் பயனாளிகள் வீதம் நான்கு ஒன்றியங்களில் மொத்தம் 800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் மூலம் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஏழைகளின் பங்கு அடையாள எண் வைத்திருக்கவேண்டும். சொந்த கிராமத்தில் நிலையாக வசித்து வரவேண்டும்.
மேலும், அரசு திட்டத்தின் கீழ் விலையில்லா கறவை பசுக்கள், விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள், மற்றும் கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முந்தைய ஆண்டுகளில் பயன் பெற்றவராக இருக்கக் கூடாது. ஆதரவற்ற பெண்கள், விதவை, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு விதிமுறைகளின் படி 30 சதவீதம் எஸ்சி – எஸ்டிபெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 4 வார வயதுள்ள 50 அசில் நாட்டுரக கோழிக் குஞ்சுகள் ரூ.3750-க்கு இலவசமாக வழங்கப்படும்.
மேலும் 30 சதுரடி பரப்புள்ள இரவு கோழிகள் அடைக்கும் கூண்டிற்கு ரூ.2500- மானியம் வழங்கப்படும். கோழிவளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தங்களுக்கு அருகாமையில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி 15.11.2018-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.