Perambalur: Collector presents certificates of appreciation to government officials who performed well in Alathur union!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் மிருணாளினி தலைமையில் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் சிறப்பாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட துறைகளில் இலக்கினை நிறைவு செய்த அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், நிதி ஆயோக் மூலம் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளிலும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அரசுத் திட்டங்களை செயல்படுத்தினர். அந்த வகையில், சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டார அலுவலர்கள், முன்களப்பணியாளர்களை பாராட்டும் விதமாக நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
மாவட்ட நிலையிலான 22 அலுவலர்களுக்கு கேடயத்துடன் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கங்களும், சுகாதாரத் துறை முன்களப் பணியாளர்களான வட்டார மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், மகளிர் நல தன்னார்வலர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், நடமாடும் மருத்துவக்குழு பணியாளர்கள் என 83 நபர்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் முன்களப் பணியாளர்களான அங்கன்வாடி பணியாளர்கள் 49 நபர்களுக்கும், வேளாண்மை துறையில் முன்களப் பணியாளர்களான 18 உதவி வேளாண்மை அலுவலர்களுக்கும், மகளிர் திட்டத்தில் முன்களப் பணியாளர்களான வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய சுய உதவி குழு பயிற்றுனர்கள் 43 நபர்களுக்கும் கலெக்டர் மிருணாளினி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட திட்டகுழு அலுவலர் சந்திரா, வேளாண் இயக்குனர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.