Perambalur District Draft Voter List Issue
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா மாவட்ட ஆட்சியரகத்தில் வெளியிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெரம்பலூர் (தனி) மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 05.01.2017 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 2,81,073 வாக்காளர்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,58,442 வாக்காளர்களும், இதரர் 25 வாக்காளர்களும் என மொத்தம் 5,39,515 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
அதன்பின்னர் நடந்த தொடர் திருத்தப் பணியின்போது பெறப்பட்ட விண்ணப்பங்களில் பெயர் சேர்த்தல் தொடர்பாக 3,056 ஆண் வாக்காளர்களும், 3,617 பெண் வாக்காளர்களும் என ஆக மொத்தம் 6,673 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,180 ஆண் வாக்காளர்களும், 836 பெண் வாக்காளர்களும் மற்றும் 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 965 ஆண் வாக்காளர்களும், 662 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியிடப்படுகின்ற வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 147, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 322 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,82,862 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,37,890 ஆண் வாக்காளர்களும், 1,44,959 பெண் வாக்காளர்களும், இதரர் 13 வாக்காளர்களும் ஆவர்.
இதேபோல், 148, குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 316 வாக்குச்சாவடிகளில் மொத்தம் உள்ள 2,59,683 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,28,791 ஆண் வாக்காளர்களும், 1,30,882 பெண் வாக்காளர்களும், இதரர் 10 வாக்காளர்களும் ஆவர்.
தற்போது மொத்தம் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,42,545 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,66,681 ஆண் வாக்காளர்களும், 2,75,841 பெண் வாக்காளர்களும், இதரர் 23 வாக்காளர்களும் ஆவர்.
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2018 அன்று தகுதி நாளாக கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்துள்ள (31.12.1999-க்கு முன்னர் பிறந்தவர்கள்) நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயா; நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும்,
03.10.2017 முதல் 31.10.2017 வரை அனைத்து வேலை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம். கிராம சபை வாக்காளர் பட்டியல் வாசித்து ஒப்புதல் பெறுதல் 07.10.2017 மற்றும் 21.10.2017 வரை நடைபெறும்.
மேலும், 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய 2 ஞாயிற்றுக் கிழமைகளிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்திடவும், அன்றைய தினம் அங்கீகரீக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒருங்கிணைந்து வாக்காளர் பட்டியலில் ஏதேனும் விடுதல் இருப்பின் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட விண்ணப்பங்களை பெற ஆணையிட்டுள்ளது. மேலும், 05.01.2018 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரீக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.