Perambalur: Farmers’ grievance redressal meeting; A request to make the district without oak trees!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் நடந்தது.

இதில், வேளாண்மைதுறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.4,150 மதிப்பில் மின்கலன் தெளிப்பான்களும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு தலா ரூ.6,510 மதிப்பிலான மக்காசோளம் மேம்படுத்தப்பட்ட செயல் விளக்கமும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் விதை கிராமத் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு ரூ.255 மதிப்பில் 5 கிலோ கேழ்வரகு விதையையும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு ரூ.3540 மதிப்பில் மண்புழு உரத் தொட்டியும், தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு தலா ரூ.2,00,000 மதிப்பில் குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பதற்கான ஆணையினையும் என மொத்தம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.6,25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளாவன: ராஜாசிதம்பரம்: சிறுகூடல் பால் கூட்டுறவு கடன் சங்கத்திற்கென்று நிரந்தரமான இடம் ஒதுக்கீடு செய்து வழங்கிட வேண்டும் என்றும், ராமராஜன்: கூட்டுறவுத் துறையில் உள்ள டிராக்டர்களை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ராஜு : பெரம்பலூர் மாவட்டத்தை சீமை கருவேல் மரங்கள் அற்ற மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கை.களத்தூரில் மாணவிகளுக்கான விடுதி ஒன்றை புதிதாக ஏற்படுத்தி தருமாறும், விஸ்வநாதன்: பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான வெங்காய கொட்டகைகளை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ராமலிங்கம்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா போதிய இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ராஜா: மக்காச்சோளப் பயிருக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கண்ணபிரான்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், எசனை, அரணாரை ஏரிகளில் வெட்டிய கருவேல மரங்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கருணாநிதி: சம்பங்கி பூவில் ஏற்பட்டுள்ள நோயினை கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சக்திவேல்: மக்காச்சோளத்தில் தற்சமயம் சத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனை நிவர்த்தி செய்திட தேவையான அறிவியல் தொழில்நுட்பங்களை அனைத்து விவசாயிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் பத்திரிகை செய்தியாக வெளியிடவும், நீலகண்டன்: நடப்பு பசலிக்கு பயிரிடப் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு அடங்கல் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மக்காச்சோள பயிரில் தற்சமயம் நிலவிவரும் தண்டு அழுகல் நோயினை தீர்த்திட வேளாண்மை துறை உரிய நடவடிக்கை எடுக்கவும், வரதராஜன்: மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் மீன் வளர்ப்பதினை ஊக்கப்படுத்திட நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்தில் நிலவிவரும் யூரியா தட்டுப்பாட்டினை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்கவும், ஏ.கே. ராஜேந்திரன்: தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடன் வழங்கிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும், ஜெயராமன்: மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து பள்ளிகளில் தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கவும், சக்திவேல் : வேப்பூரில் உலர் களம் ஒன்று அமைந்திட நடவடிக்கை எடுக்கவும், செல்லத்துரை: எம்ஆர்எப் நிறுவனத்தின் மூலமாக எம்ஆர்எப் நிறுவனம் அமைந்துள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்களில் கிராம மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும், ரமேஷ்: மாவட்டத்தில் தெரு நாய் பிரச்சனையை உடனடியாக தீர்த்திடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை உடனுக்குடன் பதில் அளிக்க உத்தரவிட்டதன் பேரில், அலுவலர்கள் விவசாயிகளுக்கு பதில் அளித்தனர்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய அளவு யூரியா இருப்பு வைத்திட நடவடிக்கை எடுக்கப்படும். மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள தண்டு அழுகல் மற்றும் சம்பங்கி பூவில் ஏற்பட்டுள்ள நோய் தாக்குதல் ஆகியவற்றை உடனடியாக வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறையினர் கள ஆய்வு செய்து தகுந்த அறிவுரை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், உரங்கள் அதிக விலைக்கு விற்பது கண்டறியப்பட்டால் விற்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து வேளாண் உரங்கள் விற்பனை தொடர்பாக அவ்வப்போது ஆய்வு செய்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 செப்டம்பர் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 125.00 மி.மீ., பெய்த மழையளவு 90.09 மி.மீ, ஆகும். 2025 செப்டம்பர் வரை பெய்ய வேண்டிய மழையளவு 395 மி.மீ., பெய்த மழையளவு 432.47 மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல்லில் 84.266 மெ.டன்கள், சிறுதானியங்களில் 6.407 மெ.டன்கள், பயறு வகைகளில் 7.301 மெ.டன்கள், எண்ணெய்வித்து பயிர்களில் 7.205 மெ.டன்கள் இருப்பில் உள்ளது இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் அசோக்குமார், பெரம்பலூர் கோட்டாட்சியர் அனிதா, கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சக்திவேல், முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) ராணி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!