Perambalur: Farmers protest and blockade the Dhanalakshmi Srinivasan Sugars Mill demanding payment of dues!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள உடும்பியம் கிராமப் பகுதியில் இயங்கி வருகிறது வி வி மினரல்ஸ் என்கிற தனலட்சுமி சீனிவாசன் தனியார் சர்க்கரை ஆலை இந்த ஆலையில் கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தில் பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 390 விவசாயிகள் தங்கள் வயல்களில் உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகளை இந்த ஆலைக்கு வெட்டி அனுப்பி உள்ளனர்.
45 நாட்களில் கரும்புக்கு உண்டான பணத்தை ஆலை நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், தற்போது 7 மாதங்கள் கடந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கி பணம் ரூ. 6 கோடியே 75 லட்சத்தை இதுவரை பட்டுவாடா செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பலமுறை விவசாயிகள் ஆலை நிர்வாகத்திடம் கேட்டும், பணம் கொடுப்பதற்கான எந்தவித நடவடிக்கை இல்லை என்பதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று கரும்பு ஆலை நுழைவு வாயில் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், தொடர்ந்து கரும்பு பணம் தரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்த கரும்பு விவசாயிகளை அழைத்து கரும்பு ஆலை நிர்வாகம் வாரம் ஒரு கோடி ரூபாய் என்ற நிலையில் ஏழு வாரத்துக்குள் ரூ. 6 கோடி 75 லட்சத்தை கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை கொடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த பேச்சு வார்த்தையின் போது பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் வேப்பந்தட்டை தாசில்தார் சின்னதுரை மற்றும் ஆலை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்