Perambalur: Government assistance for elderly Tamil scholars; Collector informs!
தமிழ்நாடு அரசு சார்பில் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் தமிழ்த் தொண்டர் பெருமக்களை பொருள் வறுமை தாக்காதவகையில் மாதம்தோறும் ரூ.7500/- உதவித்தொகையும், ரூ.500/- மருத்துவப்படியும் என மொத்தம் ரூ8,000 வழங்கப்படுகிறது.
தமிழுக்காகத் தம் வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
தமிழ் காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2500/- மற்றும் மருத்துவப் படி ரூ.500/- என அரசு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
2025-2026ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் 16.04.2025 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்தபடி, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-2026ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும், நேரிலும் வழங்கலாம். மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தமிழறிஞர்களுக்கு 01.01.2025 ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் (ஸ்மார்ட் கார்டு), மரபுரிமையர் (கணவன் / மனைவி) இருப்பின் அவரது ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்பப்படிவத்தினை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்திலோ கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வழங்கலாம் அல்லது tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவோ பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் 17.11.2025 ஆகும். இந்த வாய்ப்பினை அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.