Perambalur : Higher than the levels of noise to wake banned crackers!
அனுமதிக்கப்ட்ட அளவை விட கூடுதல் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யவும், பொதுமக்கள் இரவு 10 முதல் காலை 6 மணிவரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்க தடை விதித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வகாம் தெரிவித்துள்ளதாவது
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். மக்களுக்கு இன்னல்களை கொடுத்து வந்த நரகாசுரனை அழித்த தினத்தை நினைவு கூறும் வகையில் தீபங்களுடன் தீபாவளியினை தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளது.
கட்டுப்பாடற்ற அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய வெடிகளையும், காலவரையின்றி பாதுகாப்பு அற்ற வகையில் பட்டாசுகளை வெடிப்பதை கருத்தில் கொண்டு பொது நல வழக்கு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், 2005 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது.
அதன்படி பண்டிகை தினங்களில் வெடி வெடிப்பது என்பது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையே வெடிக்க வேண்டும் எனவும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய வெடி ஏதும் வெடிக்கக்கூடாது எனவும், அதிக ஒலி எழுப்பும் வெடிகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதித்தும் ஆணை வழங்கியது. மேலும் பொதுமக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் தேவையான அளவிற்கு ஒலி, மாசு குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் 28.10.2015 அன்று வழங்கிய உத்தரவில் 2005ல் வழங்கிய உத்தரவினை சரிவர அமல்படுத்தவேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அறிவுரையின்படி பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பின்வருவனவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
அதனடிப்படையில் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளின் வகைகள், ஒவ்வொரு பட்டாசுகளில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் அவற்றின் அளவுகள் மற்றும் அதனை வெடிக்கும்பொழுது அவை ஏற்படுத்தும் ஒலி, மாசு அளவுகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கவேண்டும். மேலும், அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபல் மேல் ஏற்படுத்தும் எந்த ஒரு பட்டாசும் விற்பனை செய்யக்கூடாது.
பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கிய விதிமுறைகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக்கூடாது. மேலும, உச்சநீதிமன்ற விதிமுறைகளை கடைபிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
தீபாவளி குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்கூழலுக்குகந்த தீபாவளியினைக் கொண்டாடவேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.