Perambalur: Iridium; 5 members of the same family arrested for defrauding Rs. 2.85 crore!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் நாகராஜன்(45). இவர் அரியலூரில் கடந்த 20 ஆண்டுகளாக மல்லி மற்றும் மிளகாய் மண்டி நடத்தி வந்த நிலையில், தற்போது பெரம்பலூர் 4ரோடு பகுதியில் ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இவரிடம், பெரம்பலூர் முத்து நகரில் வசிப்பவர்களும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் திருநகரில் எலக்ட்ரிக்கல் மற்றும் பெயிண்ட் கடை நடத்தி வருபவர்களுமான ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவகுமார் (39), ராஜகோபால் (62), ராஜசேகர்(51), பஜிலா பேகம்(36), மற்றும் புகழேந்தி (32) உள்ளிட்ட 5 பேரும், சத்தியசீலன் என்பவர் மூலம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு அன்பாக பேசி, பழகி, நம்ப வைத்து, இரிடியம் என்ற
ஒரு அரிய வகையைச் சேர்ந்த, மிக அடர்த்தியான தனிமத்தில் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளில் 10 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகளை கூறி, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிறுக, சிறுக 2 கோடியே 85 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, தொடக்கத்தில் பெற்ற பணத்திற்கு அதிக லாபத்தொகையை கொடுத்து நம்ப வைத்து பின்னர் மோசடி செய்யும் நோக்கத்தில் பேசி வந்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் பணத்தை திருப்பி கொடுத்து விடுங்கள் என கேட்ட போது, இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சிவகுமார் உள்ளிட்ட 5 பேரும் பணத்தை திருப்பி தராமல் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேராவிடம் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் DCB போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட 5 பேரும் நாகராஜனிடம் ரூ. 2 கோடியே 85 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சிவகுமார், சிவக்குமாரின் தாய் மாமன்கள் ராஜகோபால், ராஜசேகர் மற்றும் சிவக்குமாரின் மனைவி பஜிலாபேகம், உறவினர் புகழேந்தி உள்ளிட்ட 5 பேரையும் இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி தலைமையில் கைது செய்த பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, வேப்பந்தட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இரிடியம் என்ற அரிய வகை தனிமத்தில் முதலீடு செய்தால் 10 கோடி லாபம் கிடைக்கும் என வியாபாரியிடம் சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் 2 கோடியே 85 லட்ச ரூபாய் வாங்கி ஏமாற்றிய புகாரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.











kaalaimalar2@gmail.com |
9003770497