எளம்பலூர் கல் குவாரிகளில் அளவுக்க அதிகமான சக்தி கொண்ட வெடிகளை வைத்து தகர்ப்பதால் அதிரும் சிட்கோ தொழிற்பேட்டை : மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டை அருகே உள்ள மலை குவாரிகளில் அதிக அளவு சக்தி கொண்ட வெடிகளை பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதால் ஏற்படும் அதிர்வுகளால் சிறுதொழில்கள்-தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட குறு மற்றும் சிறுதொழில்கள் சங்கத்தின் கூட்டம் தபால் நிலையத் தெருவில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு சங்க செயலாளர் சதாசிவம் தலைமை வகித்தார். நிறுவனத் தலைவர் ஓம்சக்தி உதயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் கவுரவத் தலைவர் ராமசாமி, பொருளாளர் தினேஷ்சக்தி, துணைத் தலைவர்கள் வாலிகண்டபுரம் அமீர்பாட்சா, தமிழ் அழகன், துணை செயலாளர்கள் ரத்தினம், காளிமுத்து, லட்சுமணன் இளவரசன்,செல்வராஜ், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மலையில் உள்ள கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை விதிமுறைகளை மீறி வெடிவைத்து பாறைகளை தகர்க்கின்றனர்.
வெடிவைக்கும்போது பாறைகள் சிதறி பறந்து வந்து தொழிற்கூடங்களின் மீது விழுவதால் தொழிற்கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒருவித பய உணர்வுடனே வேலை பார்க்க வேண்டியுள்ளது. இதனால் கூலிஆட்கள் வேலைக்கு வரத் தயங்குகின்றனர்.
இந்த கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக வெடிவைத்து பாறைகளை உடைப்பதால் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பாகவே குவாரி ஒப்பந்தத்தை ரத்து செய்திடுமாறு மாவட்ட கலெக்டருக்கு இக்கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட தொழில்மையம் மற்றும் புதிய சிட்கோ அலுவலகம் ஆகியவற்றுக்கான புதிய கட்டிடத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததற்கும், சிறுதொழில்கள் வளர்ச்சிக்கு கடன்உதவி முகாம்கள் நடத்தி சிறு, குறுதொழில்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளமைக்கும் முதல்அமைச்சர் ஜெயலலிதாவிற்கு இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
நீட்ஸ் திட்டத்தின்கீழ் புதிய தொழில்முனைவோருக்கு மட்டும் அல்லாமல் ஏற்கனவே சிறுதொழில்கள் புரிந்த மற்றும் நலிவடைந்த சிறுதொழில்புரிவோரின் வாரிசுகளுக்கும் இத்திட்டத்தின்கீழ் மானியத்துடன் கூடிய நிதிஉதவி அளித்திட தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.