Perambalur; Minister Sivasankar distributed books and silver water bottles to about 1000 government school students!

தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் சுமார் 1000 மாணவ மாணவிகள் போட்டித்தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், கல்வி சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவினரால் உருவாக்கப்பட்ட முக்கிய வினா-விடைகள் அடங்கிய தேர்வை வெல்வோம்” என்ற தலைப்பிலான புத்தகங்களை தனது சொந்த செலவில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அதனடிப்படையில், சிவசங்கர் அறக்கட்டளை சார்பில், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெமீன் பேரையூர், ஆதனூர், கொட்டரை, தெரணி, கொளத்தூர், கூடலூர், சில்லக்குடி, ஜெமீன் ஆத்தூர் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், கூத்தூர், காரை, கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கும் என மொத்தம் 972 மாணவ மாணவிகளுக்கு “தேர்வைவெல்வோம்” வினா விடை புத்தகங்களை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் இன்று கலெக்டர் ந.மிருணாளினி, முன்னிலையில் வழங்கினார்.

இந்தப் புத்தகங்கள் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மற்றும் அரசுப் பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பின் மாணவ மாணவிகள் எளிதில் படிக்கும் வகையில், தேர்வில் கட்டாயம் கேட்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படும் வினாக்கள் அதற்கான விடைகளுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வினாக்களும், விடைகளும் மாணவர்களுக்கு புரியும் வகையிலும் எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சிவசங்கர் மாணவர்களுக்கு இந்த புத்தகங்களை தனது சொந்த செலவில் தயாரித்து வழங்கி, பொதுத்தேர்வுகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, மாபெரும் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் டி.ஆர்.சிவசங்கர், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வ.சுப்பிரமணியன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட திமுகவின் முக்கிய கட்சி பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!