Perambalur: Minister Sivasankar laid the foundation stone of new projects worth Rs. 9.43 crores!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்றத் தொகுதி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளக்காநத்தம், அணைப்பாடி, கொளத்தூர், ஜெமீன் ஆத்தூர் மற்றும் நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று ரூ. 9.43 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கலெக்டர் ந.மிருணாளினி முன்னிலையில் பணிகளை தொடங்கி வைத்தார்.
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு 2025-26 திட்டத்தின் கீழ் ரூ.4.29 கோடி மதிப்பீட்டில் அரியலூரில் இருந்து ஆலத்தூர்கேட், செட்டிகுளம் வழியாக செஞ்சேரி செல்லும் மாநில சாலையை அகலப்படுத்தி பயன்படுத்துவதற்கும், அணைப்பாடி ஊராட்சியில் ரூ. 1.10 கோடி மதிப்பில், கொளக்காநத்தம் – கருடமங்கலம் செல்லும் சாலையை அகலப்படுத்தி பலப்படுத்துவதற்கும் மற்றும் கொளத்தூர் ஊராட்சியில் கொளத்தூர் முதல் திம்மூர் வரை செல்லும் சாலையில் ரூ.1.41 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணியினையும், ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2. கோடியே 47 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் ஜெமீன் ஆத்தூர் – மேத்தால் செல்லும் மண்சாலையை தார்சாலையாக பலப்படுத்துதல் பணி என ரூ.9 கோடியே 43 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், நொச்சிக்குளம் பகுதியில் ரூ.16.45லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தையும் இன்று திறந்து வைத்தார். முன்னதாக அங்கிருந்த அங்கன்வாடியில் பயிலும் சிறு குழந்தைகள் அமைச்சர் சிவசங்கர், கலெக்டருக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர். அதை பெற்றுக் கொண்ட அமைச்சர் மற்றும் கலெக்டர் கணிவுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். குழந்தைகள் அமைச்சருடன் கொஞ்சி பேசி மகிழ்வித்தனர். முன்னதாக, பல ஊர்களில் மாணவர்கள், பெண்கள், அமைச்சர் சிவசங்கருடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் தமிழமுதன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி அலுவலர் சுந்தரவல்லி, உள்ளிட்ட வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497