Perambalur: Minister Sivasankar distributed the government’s free laptops to college students.

தமிழ்நாடு அரசின் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கத்தில் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர், ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலன் கருதி நல்ல திட்டங்களை வழங்கி வருகின்றார். குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.
எந்த ஒரு காரணத்திற்காகவும் மாணவ மாணவிகளின் கல்வி தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக, காலை உணவுத்திட்டம், இலவச கல்வி உபகரணங்கள், மிதிவண்டி உள்ளிட்ட திட்டங்கள். பள்ளியில் பயிலும்போதே உயர்கல்விக்கு என்ன படிக்கலாம், என்ன படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதை விளக்கி திறன் மேம்பாட்டை வளர்க்கும் நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள். உயர்கல்வி பயிலும்போதே வேலைவாய்ப்பிற்கு உதவிடவும், தங்களது படிப்பு சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் என முதலமைச்சரின் ஒவ்வொரு திட்டமும் மாணவ மாணவிகளின் கல்வி உயர்வுக்கான திட்டங்களாகவே உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். அனடிப்படையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மடிகணினிகள் வழங்கப்படுகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் 1464 மாணவ மாணவிகளுக்கும், தனியார் கல்லூரிகளில் பயிலும் 4685 மாணவ மாணவிகளுக்கும் மடிக்கணிகள் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவ மாணவிகள் அரசின் மடிக்கணினிகளை நல்ல முறையில் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் கல்வியில் உயர்ந்து சிறந்து விளங்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் எண்ணத்தை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன், என பேசினார்.
பெரம்பலூர் கலெக்டர் ந.மிருணாளினி, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அட்மா தலைவர் வீ. ஜெகதீசன், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசாமி, ராஜ்குமார், வேப்பூர் யூனியன் முன்னாள் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, பெரம்பலூர் மாவட்ட திமுக இணைஞரணி அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497